உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுக் குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது சாத்தியமற்ற நிலையிலேயே உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தற்போதைய நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் கணிப்பின் படி, 2022ம் ஆண்டு இடைப்பகுதியிலிருந்தே தற்காலிக குடியேறிகளும் நிரந்தர குடியேறிகளும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களைப் பொறுத்தமட்டில் இந்தாண்டின் பிற்பகுதியிலிருந்து சிறு சிறு கட்டங்களாக மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு உள்ளது.
அத்துடன், ஆஸ்திரேலிய அரசு சமர்பித்துள்ள 2021-22 நிதிநிலை அறிக்கையில் ஜனவரி 2022 பின்னர் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான உரிமைப் பெறுபவர்கள் அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைகளை 4 ஆண்டுகளுக்கு பிறகே பெற முடியும். இந்த புதிய மாற்றத்தின் மூலம் 671 மில்லியன் டாலர்கள் ஆஸ்திரேலிய அரசுக்கு மிச்சமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கு 79,600 இடங்களும் குடும்ப மீள்-ஒன்றிணைவுக்களுக்காக 77,300 இடங்களும் என வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு 160,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம், மனிதாபிமான திட்டத்தின் கீழ், 13,750 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2021ம் ஆண்டு முழுமையும் 2022ம் ஆண்டு நடுப்பகுதி வரையிலும் சர்வதேச வருகைகள் மாநில மற்றும் பிரதேச தனிமைப்படுத்தல் எண்ணிக்கைகள் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். இதில் பாதுகாப்பான பயண மண்டலங்களிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது,” என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பான பயண மண்டலம் ‘நியூசிலாந்து’ மட்டுமே ஆகும்.