அவுஸ்ரேலிய விசாவில் புதிய கட்டுப்பாடு

அவுஸ்ரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வேலை ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட்டு இன்னொரு வேலை தேடிக்கொள்வதற்காக தங்கிக்கொள்ள வழங்கி வந்த 90 நாள் அவகாசத்தை 60 நாட்களாக குறைத்து புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ‘457 விசா’ என்ற 4 ஆண்டு கால விசா திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விசாவின்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டில் பார்த்துவந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால், அங்கு 90 நாட்கள் தங்கி இருந்து மற்றொரு வேலைக்கு மாறி செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த 90 நாள் அவகாசத்தை அந்த நாட்டு அரசு 60 நாட்களாக குறைத்து புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் குடியேற்றத்துறை மந்திரி பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நவம்பர் 19-ந் திகதி முதல், 457 விசா வைத்திருப்பவர்கள், ஒரு வேலை ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட்டு இன்னொரு வேலை தேடிக்கொள்வதற்காக தங்கிக்கொள்ள வழங்கி வந்த 90 நாள் அவகாசம், 60 நாட்களாக குறைக்கப்படுகிறது” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியர்கள் செய்வதற்கு காத்திருக்கிற வேலைக்கு வெளிநாட்டினர் போட்டி போடுவதை குறைப்பதுதான் இந்த மாற்றத்தின் நோக்கம். ஆஸ்திரேலியாவில் 457 விசாவின் கீழ் தங்கியிருந்து பணி செய்து, வெளிநாட்டினர் செய்த பங்களிப்பை மதிக்கிறோம். அதே நேரத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் ஒரு வேலையை செய்வதற்கு தயாராக இருக்கிறபோது, அவருக்கு முன்னுரிமை அளிப்பதுதான் அரசின் கொள்கை” என்றார்.

அவுஸ்ரேலியாவில் வேலை செய்கிற பிற நாட்டு தொழிலாளர்களில் இந்தியர்கள்தான் 26.8 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளனர். எனவே அவுஸ்ரேலியா கொண்டு வந்துள்ள விசா நடைமுறை மாற்றம், இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.