அவுஸ்திரேலியா – மெல்பன் பகுதியினை சேர்ந்த நபரொருவரினால் இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்கு அரசினால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கியுள்ள மெல்பன் குடியிருப்பாளரான 73 வயதான Gary Newman என்பவரே இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால், அங்கிருந்து நாடு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து, அவர் அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளார்.
அரசின் தடை உத்தரவானது அவரது தனியுரிமை மீறல் என்று இதன்போது அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
இந்நிலையில், தேசிய நலனைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அத்தகைய தனி உரிமைகள் மீறப்படலாம். அரசுக்கு அந்த உரிமை இருக்கின்றது என அரச வழக்கறிஞர்கள் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அரசியலமைப்பில் சில அம்சங்களுடன் இந்த தடை உத்தரவு ஒத்துப்போகவில்லை என்ற வாதப்பிரதிவாதங்களுடன் குறித்த வழக்கு மீண்டும் தொடரவுள்ளது.
மேலும்,இந்தியாவிலிருந்து சில விமானங்கள் அவுஸ்திரேலியா வருவதற்கான நடவடிக்கைகள் இந்த வார இறுதியிலிருந்து ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,தமிழகத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளதுடன்,தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 880 ஆக பாதிவாகியுள்ளது.
மேலும்,தமிழகத்தில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்கு முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.