காற்று வெளியிடை’ படத்தின் 5வது பாடல் எப்படி உருவானது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
மார்ச்சில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒரே ஒரு பாடலை மட்டும் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார் மணிரத்னம். இதன் படப்பிடிப்புக்காக ஆயுத்தமாகி வருகிறது படக்குழு.
பாடலாசிரியர் வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் மூவரும் இணைந்து இறுதிப் பாடலை தயார் செய்திருக்கிறார். அதன் அனுபவத்தை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.
அதில், “’காற்று வெளியிடை’ படத்தின் ஐந்தாம் பாடல் நேற்று நிறைவுற்றது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு தொழிற்படுவது ஒரு தனி சுகம்.
நேற்று மாலை 4 மணிக்குக் கூடினோம்;
6 மணிக்கு மெட்டு இறுதியானது;
8 மணிக்குப் பாட்டு உறுதியானது;
இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவு நிறைந்தது.
என்ன லயம்! என்ன நயம்!
பிரிவின் வலி சொல்லும் நினைவின் பாடல் அது. ஒரு வரி சொல்லட்டுமா?
“அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்”” என்று தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.
இப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு திகதிகள் ஒதுக்கியிருக்கிறார் கார்த்தி.