நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து: நான்கு பேர் காயம்!

நியூஸிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர்.

தெற்கு தீவின் மத்திய டுனெடினில் உள்ள கவுண்டவுன் பல்பொருள் அங்காடியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘தாக்குதலின் பின்னணியில் உள்ள உந்துதல் தெளிவாக இல்லை, ஆனால் இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத நிகழ்வு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’ என கூறினார்.

நியூஸிலாந்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் அரிது. ஆனால் 2019 கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு தாக்குதல் உலகையே உலுக்கியது. ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி இரண்டு மசூதிகளில் நடத்திய கொடூர தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.