யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 668 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
யாழ். மாவட்டத்தில் 18 பேரும் கிளிநொச்சி, மன்னாரில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட3 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். சிறைச்சாலையில் 9 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் காலல் துறை உத்தியோகத்தர்கள். மற்றொருவர் தொற்றாளருடன் முதன்மைத் தொடர்புடையவர்.
அத்துடன் சுன்னாகம் மின் நிலையப் பகுதியில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் முதல் நிலைத் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.