அவுஸ்திரேலியாவில் நாளிதழொன்றில் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது தொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறித்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது.
இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்,கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலாச்சார சமூகங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும், அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்துக்களின் நம்பிக்கையை The Daily Telegraph முற்றிலும் அவமதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை சித்தரிக்க பல வழிகள் இருக்கும்போது ஒருசாராரின் மத நம்பிக்கையை ஏன் அவமதிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த கட்டுரையை வெளியிட்டதற்காக The Daily Telegraph மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இந்துக்களின் நம்பிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தமது ஊழியர்களுக்கு அறிவூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்துக் கடவுள்களின் படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுவதற்கு எதிராக Australian Press Council தெளிவான வரைமுறைகளை வகுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயணத்தடையை மீறி இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிப்பது என்ற அறிவிப்பு, கோவிட் பேரவலத்துக்குள் சிக்கியுள்ள இந்தியாவை நரகம் என வர்ணிப்பது, இந்தியா குறித்த செய்தியில் இந்துக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரங்களை வெளியிடுவது என்ற வரிசையில் இன்னும் என்னென்னவற்றின் மூலம் இந்தியர்களையும் ,இந்துக்களையும் அவுஸ்திரேலிய அரசும், ஊடகங்களும் புண்படுத்தப்போகின்றன என இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.