இனவழிப்புக்கு உள்ளான ஆர்மேனியர்கள் – அமெரிக்காவின் அங்கீகாரம்

சரியாக 106 வருடங்களுக்கு பின்பு ஆர்மேனிய மக்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு ஓட்டோமான் பேரரசினால் இடம் பெற்ற தாக்குதல்கள் ‘இனப்படுகொலை’ தான் என்று முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்த விடயத்தினை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமும் இதுதான். அமெரிக்கா வழங்கியுள்ள இந்த இனஅழிப்பு அங்கீகாரம் துருக்கியின் உள்நாட்டு அரசியலை ஒரு உலுக்கு உலுக்கி விடும் நோக்கம் கொண்டதே தவிர ஆர்மேனிய மக்களின்  நலன் குறித்த எந்த விவகாரத்திற்கும் பெரிதாக பயன்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் அமைந்தள்ள துருக்கி 1923ஆம் ஆண்டு வரை ஓட்டோமான் பேரரசாக பரிணமித்திருந்தது. துருக்கியர்கள் ஓட்டோமான் பேரரசு  ஆசிய, ஐரோப்பிய, வட ஆபிரிக்கா எங்கும் சுமார் 700 வருடங்கள் பரந்திருந்தது. இந்த ஓட்டோமான் பேரரசு தற்போது உலகளாவிய ரீதியில் உள்ள 30சுதந்திர நாடுகளை தன்னகத்தே கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றனர்.

ஓட்டோமான் பேரரசு தனது இறுதிக் காலங்களில் ஐரோப்பிய வல்லரசுகளின் படையெடுப்புகள் உள்நாட்டு போராட்டங்கள் கூட்டு சதிகள் என்று பல்வேறு முனைகளில் இருந்து அழுத்தங்களை எதிர்கொண்டது. இந்தநிலைமையானது சுமார் ஏழு ஆண்டுகள் நிலைத்திருந்தது. இந்த காலப்பகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கைகளை ஓட்டோமான் தலைமைத்துவம் செய்திருந்தது. இதனால் பல மில்லியன் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.