பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கு வெளியே அறிவு மரபே கிடையாது என்று உலவிவந்த மாயையை உடைத்த பெரியார், ம.பொ.சிவஞானம், ஜீவா, மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கருணாநிதி வரிசையில் வருபவர் பெ.சு.மணி (1933-2021). எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த பெ.சு.மணியின் நூல்களெல்லாம் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உயர் படிக்கட்டுகளாக இருக்கின்றன. தனது ஆய்வுப் பணிக்காக மீனம்பாக்கம் அஞ்சலகத் துறையில் அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு வேலையை மாற்றிக்கொண்டு, தனது சைக்கிளில் பகற்பொழுது முழுவதும் சென்னை நூலகங்களில் கிடையாகக் கிடந்து தேனீபோலச் சேகரித்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். இன்றுபோல் எந்த மின்சாதன சௌகரியங்களும் இல்லாத காலத்தில், அனைத்துத் தரவுகளையும் கையால் எழுதிய பல நூற்றுக்கணக்கான கையெழுத்துப் படிகளை நான் கண்டிருக்கிறேன்.
பெ.சு.மணிக்கு குருபீடமாக விளங்கியவர் ம.பொ.சிவஞானம். தமிழ்த் தேசியச் சிந்தனை அடிப்படையைக் கொண்ட பெ.சு.மணியின் ஆரம்பப் பயணமானது மார்க்ஸ், பாரதி, விவேகானந்தர் என்ற மூன்று புள்ளிகளில் தொடங்கியது. வள்ளலாருடைய சமரச சன்மார்க்கத்தை உள்வாங்கியவரும்கூட. 1973-ல் ‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கன்னிப் படைப்பின் மூலமாகத் தேசியம் குறித்து விரிவாக ஆராய்ந்தார். “தேசியம் இருந்திருக்கிறது. ஆனால், அதுவரை தேசியத்தை விளக்கி நூல் விரிவாக தமிழில் வந்ததில்லை. அந்தக் குறையை இந்த நூல் மூலம் போக்கியவர் பெ.சு.மணி” என்றார் ம.பொ.சி. அதன் பின்பு கலாச்சாரத் தேசியம் குறித்தும், அதன் முரண்பாடுகளையும் விளக்கும் ‘தமிழகத்தில் பிரம்ம சமாஜம்’ நூலும் அரிய படைப்பு.
தமிழில் அரசியல் நூல்களைப் படைத்த முன்னோடியான வெ.சாமிநாத சர்மா தன்னுடைய இலக்கிய வாரிசாக பெ.சு.மணியை அறிவித்து அவரது நூல் உரிமையையும் இவருக்கே வழங்கிட உயில் எழுதி வைத்தார். அதன்படி மு.கருணாநிதியால் வெ.சாமிநாத சர்மாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதன் பரிசுத் தொகை பெ.சு.மணிக்கு வழங்கப்பட்டது. வெ.சாமிநாத சர்மா, “இலக்கியப் பணி என்ற பெயரால் தங்கள் பொழுதையோ மற்றவர்கள் பொழுதையோ போக்குவதற்காக நூல்கள் எழுதாமல் அறிவுக்கும் சிந்தனைக்கும் ஊட்டம் தரக்கூடிய நூல்களைப் படைப்பதில் இவர் வல்லவர்” என்று பெ.சு.மணியைப் பாராட்டினார். உனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதிவிடு என்றாராம் வெ.சாமிநாத சர்மா. அதைத் தாரக மந்திரமாகக் கொண்டு தரமான ஆய்வுப் புத்தகங்களை மட்டுமே எழுதி ஒரே பதிப்பகம் மூலமும் கொண்டுவந்தவர். இதுவரை 80 நூல்கள் வரை கொண்டுவந்துள்ளார். இதில் தமிழில் வெளிவந்த பாரதி ஆய்வு நூல்கள் 18, இராமகிருஷ்ணர் நூல்கள் 11, வ.வே.சு. ஐயர் நூல்கள் 7, ம.பொ.சி. நூல்கள் 5, வாழ்க்கை வரலாற்று நூல்கள் 10, இலக்கிய ஆய்வு நூல்கள் 6, இவை தவிர தமிழில் வெளியான தொன்மையான இதழ்கள் வரலாறு, அறியப்படாத கோ.வடிவேல் செட்டியார், எம்.ஆர்.ஜம்புநாத ஐயர், கா.சி.வெங்கட்ரமணி போன்ற ஏராளமான வேதாந்த, சித்தாந்த, அரசியல், இதழியல் ஆளுமைகள் தொடர்பான நூல்கள், 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்குக் கட்டுரைகள் எனப் பட்டியல் நீள்கிறது.
அனதாச்சார்லு, காஜுலு லட்சுமி நரசு, ஜி.சுப்ரமண்ய ஐயர், ஜி.ஏ.நடேசன், குத்தி கேசவ பிள்ளை, வரதராஜுலு நாயுடு, வ.உ.சிதம்பரனார், கிருஷ்ணசாமி சர்மா என இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த ஆளுமைகளை ஆவணப்படுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. தியாகிகள் போற்றத் தகுந்தவர்கள் என்ற கருத்து கொண்டு இயங்கிய பெ.சு.மணியிடம் தற்கால அரசியலர்கள் குறித்து எந்த மதிப்பீடும் இல்லை எனலாம்.
எந்த ஒரு தமிழ் ஆய்வுத் துறை மாணவர்களாக இருந்தாலும் பெ.சு.மணியின் குறிப்பிட்ட சில நூல்களை உள்வாங்கினாலே 19-ம் நூற்றாண்டு சமூகச் சீர்திருத்த இயக்கம், பக்தி இயக்கம், இதழியல் இயக்கம், அரசியல் இயக்கம் குறித்து அறிந்துகொள்ளலாம். அவை தொடர்பான மிக நுட்பமான அரிய செய்திகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் நமது பொருளாதாரம் குறித்த நூலை ‘இந்தியா இழந்த தனம்’ என்ற பெயரில் வெளியிட்டவர் மாவீரர் கிருஷ்ணசாமி சர்மா. அவருடைய முழுமையான வாழ்க்கை வரலாற்றைத் தனது அந்திமக் காலத்துக்குச் சற்று முன்பாக எழுதி முடித்து காஞ்சிபுரம், காஞ்சி அமுதனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் பெ.சு.மணி. சுப்பிரமணிய சிவா நடத்திய ‘ஞானபானு’ இதழ்த் தொகுப்பு, வெ.சாமிநாத சர்மாவின் ‘ஜோதி’ இதழ்த் தொகுப்பும் முடித்து ‘மேன்மை’ பதிப்பகத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்!
ரெங்கையா முருகன், ஆய்வாளர், ‘ஓர் இந்திய கிராமத்தின் கதை’ நூலின் பதிப்பாசிரியர்.தொடர்புக்கு: murugan72kani@gmail.com