மம்தா: வங்க மகளின் வெற்றி

வங்கத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார் மம்தா. எப்படியாவது வங்கத்தைக் கைப்பற்றிவிடும் நோக்கத்தில் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என்று பாஜகவின் பெருந்தலைகளெல்லாம் வங்கத்தில் வந்து குவிந்தனர். இன்னொரு புறம், இடதுசாரிகளும் காங்கிரஸும் ஐஎஸ்எஃபும் அமைத்த கூட்டணியின் வாக்குப் பிரிப்பானது மம்தாவையே பாதிக்கும் என்று கூறப்பட்டது. இவர்களுக்கெல்லாம் எதிர்முனையில் இருந்தவர் ஒரே ஒரு பெண். அதுவும் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்யும் பெண்!

வங்கத் தேர்தல் வரலாறு

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) காங்கிரஸ் வென்றது (150 இடங்கள், 38.82% வாக்கு வீதம்); இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக (28 இடங்கள்) உருவெடுத்தது. 1962 தேர்தல் வரையிலும் காங்கிரஸே மூன்று முறை ஆட்சியமைத்தது. பிறகு, 1967-ல் காங்கிரஸால் 280 தொகுதிகளில் 127-ஐ மட்டுமே வெல்ல முடிந்தது. இடதுசாரிக் கட்சிகளும் பங்களா காங்கிரஸ், ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அப்போதிருந்து 1971 வரை வெவ்வேறு கூட்டணி சார்பில் அஜோய் முகர்ஜி ஆட்சியமைப்பது, கூட்டணிப் பிரச்சினையால் ஆட்சி கலைந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவது என்று வெவ்வேறு காட்சிகளை வங்கம் கண்டது. 1972 தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது (216 இடங்கள், 49.08% வாக்கு வீதம்). வங்கத்தில் காங்கிரஸ் அமைத்த கடைசி ஆட்சி அது.

நெருக்கடிநிலை முடிவுக்கு வந்த பிறகு 1977-ல் நடைபெற்ற தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று (178 இடங்கள், 35.46%) ஆட்சியமைத்தது. ஜோதி பாசு முதல்வரானார். 2001-ல் அரசியலிலிருந்து ஓய்வுபெறும்போது 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட முதல்வர், உலகிலேயே நீண்ட காலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைகளைப் பெற்றார். ஜோதி பாசுவின் ஆட்சிக் காலத்தில் நடந்த தேர்தல்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 36%-க்கும் குறையாமல் வாக்கு வீதத்தைத் தக்கவைத்தது. 2001 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியமைக்க, புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானார். இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் உருவாகி 60 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக வளர்ச்சியைப் பெற்றிருந்த காலம் அது. 2006-ல் 30 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் 26.64% வாக்குகளைப் பெற்று தன் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டது.

1977-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சிக்குப் பிறகு காங்கிரஸ் சரிய ஆரம்பித்ததைப் போல் திரிணமூல் காங்கிரஸின் எழுச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி சரிய ஆரம்பித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களில் (38.93% வாக்கு வீதம்) வென்று முதன்முறையாக ஆட்சியமைக்கிறார் மம்தா பானர்ஜி. 2016 தேர்தலில் திரிணமூல் 211 இடங்களிலும் (44.93% வாக்கு வீதம்), மார்க்ஸிஸ்ட் கட்சி 44 இடங்களிலும் (12.25% வாக்கு வீதம்) வெல்கின்றன. 2021 தேர்தலில் 213 இடங்களில் (47.9% வாக்கு வீதம்) திரிணமூல் வென்றிருக்கிறது. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத மார்க்ஸிஸ்ட் கட்சியின் வாக்கு வீதம் 4.6%; காங்கிரஸ் கட்சியின் வாக்கு வீதமோ 3%.

பாஜகவின் நுழைவு

பாஜகவின் கதைக்கு வருவோம். 2011 தேர்தலில் ஒரு இடத்தில்கூட அது வெற்றிபெறவில்லை. அதன் பிறகு இடைத்தேர்தலில் ஒரு இடம். 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்கள். இப்படி ஆமை வேகத்தில் துரத்திய பாஜக மீது அச்சம்கொள்வதற்கான முகாந்திரத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் மம்தாவுக்குத் தந்தது. 42 மக்களவைத் தொகுதிகளில் 18-ல் பாஜக வென்றது (40.7% வாக்கு வீதம்). இந்திய வரைபடத்தின் மேல்பாதியிலுள்ள தங்களால் கால்பதிக்க முடியாத பெரிய மாநிலமான வங்கத்தை இம்முறை ஆக்கிரமித்துவிடுவது என்று பாஜக தனது படை முழுவதையும் இறக்கிவிட்டது. முதல் வேலையாக திரிணமூல் காங்கிரஸிலிருந்து ஆட்களைத் தூக்கும் வேலையைச் செய்தது. 2020 டிசம்பரில் திரிணமூலின் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ராஜீவ் பானர்ஜியும் தாவினார். தேர்தல் ஆரம்பிப்பதற்குள் 30-க்கும் மேற்பட்ட திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவியிருந்தார்கள்; அவர்களில் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.

வங்கத் தேர்தல் பிரச்சார காலத்தில் மோடி 17 முறையும், அமித் ஷா 21 முறையும் வலம்வந்தனர். பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் இந்தத் தேர்தல் மம்தாவுக்குச் சுலபமாக இருக்கப்போவதில்லை என்றே கணித்தன. பாஜகவின் அதி தீவிரப் பிரச்சாரம், வங்கத்தை மம்தா இரண்டு முறை தொடர்ச்சியாக ஆண்டதில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆட்சிக்கு எதிரான உணர்வு, திரிணமூல் காங்கிரஸின் தலைவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி போன்ற காரணங்களை முன்வைத்து மம்தா மூன்றாவது முறை ஆட்சியமைப்பது கடினமே என்றன ஆரூடங்கள். போதாக்குறைக்குத் தேர்தல் தொடர்பான வன்முறைகள் இரு தரப்பிலும் வெடித்தன. மத்தியப் படை வங்கத்தில் இறங்கியது.

மம்தாவின் நம்பிக்கை

இவை எல்லாவற்றையும் மீறி மம்தா நம்பிக்கையுடன் இருந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. முக்கியமாக, திரிணமூல் செயல்படுத்திய நலத்திட்டங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மம்தாவின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தன்னுடைய ஆட்சி மீதான விமர்சனங்களுக்கேற்பத் திட்டங்களை அமல்படுத்தினார். நிர்வாகத்தை எளிமைப்படுத்தினார். பெண்களின் வாக்குகள் மீது மம்தாவுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்தது. ‘உண்மையான மாற்றம்’ என்று பாஜக வைத்த முழக்கத்துக்கு எதிராக ‘வங்கத்துக்கு அதன் சொந்த மகள்தான் வேண்டும்’ என்ற முழக்கத்துடன் மம்தா தேர்தலைச் சந்தித்தார். பிரதமர் மோடி, அமித் ஷா என்று அங்கே வந்து குவிந்தவர்களையெல்லாம் ‘அந்நியர்கள்’ என்றார். பாஜக எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் மம்தாவுக்கு ஈடுகொடுக்க வங்கத்தில் ஒரு தலைவர் இல்லாமல் போய்விட்டது அதற்கு. வங்கம் இறுதியில் தன் சொந்த மகளையே தேர்ந்தெடுத்திருக்கிறது!

‘உண்மையான மாற்றம்’ என்று பாஜக வைத்த முழக்கத்துக்கு எதிராக ‘வங்கத்துக்கு அதன் சொந்த மகள்தான் வேண்டும்’ என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்தார் மம்தா. வங்கம் இறுதியில் தன் சொந்த மகளையே தேர்ந்தெடுத்திருக்கிறது!

தம்பி