சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 12 ஆம் திகதி புறப்பட்ட Polaris 3 கப்பல், 15 நாள் பயணத்தின் பின்னர் தனது வழக்கமான பாதையில் வந்து, கடந்த 27 ஆம் திகதி குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தை அடைந்திருக்கிறது.
அதிலிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், கப்பலுக்கு வெளியே பாய்ந்து, தப்பிச்சென்றுள்ளார்.
இந்த தகவல் Townsville பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தப்பிச்சென்றவரை தேடி பாரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலுக்கான கட்டுப்பாடுகளை மீறியது மாத்திரமல்லாமல், கோவிட் தனிமைப்படுத்தலை மீறியதால், பொலீஸார் கூடுதல் கவனத்தோடு தங்கள் நடவடிக்கையை மேற்கொண்டனர்.Townsville சமூகத்தின் பாதுகாப்புக்கான அறிவுப்புக்களையும் விடுத்திருந்தனர்.
இறுதியில் – இன்று திங்கட்கிழமை காலை – குறிப்பிட்ட பாகிஸ்தான் நபர் Townsville பொலீஸ் நிலையத்தில் வந்து சரணடைந்துள்ளார். தனக்கு ஆஸ்திரேலியா தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருக்குரிய கோவிட் சோதனை எடுக்கப்பட்ட பின்னர், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைப்பதற்கு Townsville பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட நபருக்கு கோவிட் தொற்று இல்லையென சோதனை முடிவு வெளிவந்துள்ளது.
இதேவேளை, Polaris 3 கப்பலை சேர்ந்த மேலும் பதினொரு பேரும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் Townsville பகுதியில் அமைந்துள்ள கோவிட் தனிமைப்படுத்தும் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல்களை பொலீஸார், ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த கப்பலிலிருந்த ஏனைய 37 பேர் குயின்ஸ்லாந்திலிருந்து ஜகார்த்தா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Eelamurasu Australia Online News Portal