நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர்.
அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.
இந்த தடையை மீறி – பயண ஓட்டைகளை பயன்படுத்தி – யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அண்மையில் ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால – உயிரியல் பாதுகாப்பு – சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சுகாதர அமைச்சர் Greg Hunt தெரிவித்திருந்தார்.
ஆனால், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் முன்பு கோவிட் பரவல் செறிவடைந்திருந்தபோது – அங்கு சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களை நோக்கி ஆஸ்திரேலிய அரசு, இவ்வளவு கடுமையான அறிவிப்பை விடுத்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தற்போது ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களுக்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாடு இனவாதம் நிறைந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பினை தெளிவுபடுத்தும் வகையிலும் இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் குறித்த அறிவிப்பு இனவாதமானது அல்ல என்பதை மறுக்கும் வகையிலும் இன்று காலை கருத்து தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிஸன் – சீனாவில் முன்பு கோவிட் செறிவடைந்திருந்த காலப்பகுதியிலும் அரசாங்கம் இதுபோன்ற அறிவிப்பை விடுத்திருந்தது. இந்த அறிவிப்புக்கள் நாட்டின் அவசரகாலநிலை சார்ந்தது. இதில் அரசியலோ இனவாதமோ இம்மியளவும் இல்லை. நாங்கள் எதிர்கொண்டிருப்பது கொடிய கிருமியை. அதிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே கடைப்பிடிக்கிறோம். கடந்த ஒருவருட காலமாக நாட்டில் அவசரகாலச்சட்டத்தின் கீழ் கோவிட் நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்துவருகிறோம். யாரும் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி சிறை சென்றது கிடையாது – என்று கூறியுள்ளார்.