12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் பைஸர் – பயோடெக் நிறுவனம் கோரியுள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை பைஸர்- பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் நிறுவனங்கள் 2,000 இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி சோதனை நடத்தியது. இதில் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த சோதனை முடிவை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாளர்கள் அமைப்பிடம் வழங்கியுள்ளோம்.
எங்கள் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அடுத்த இரண்டு வருடத்திற்குப் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாய்வழியாக கரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் பைஸர் நிறுவனம் இறங்கியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.