இரத்த சரித்திரத்தில் கிடைத்த 8 மணி நேர வேலை உரிமை

உலகம் முழுவதும் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னால் அமெரிக்க தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வரலாறு.

உலக தொழிலாளர்களின் உரிமைக் குரலாக கம்யூனிஸ்ட் கொள்கைகள் வளர்த்து எடுக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கைகள் தொழில்புரட்சியில் முன்னிலை வகித்த அமெரிக்காவிலும் பரவிக் கொண்டிருந்தன.

1880 ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் செயல்பட்ட தொழிலாளர் இயக்கங்களை ஒருங்கிணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்கிற இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கம், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்காவின் முக்கிய தொழில் நகரங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். தொழிலாளர்களின் போராட்டம், பேரணிகளால் அமெரிக்கா முடங்கியது.

அதன் ஒரு பகுதியாக மே 3 ஆம் தேதி சிகாகோவில் மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலைக் கண்டித்து அன்று இரவு சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அமெரிக்க தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போதும் கூட்டத்தினரை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசராணையின் முடிவில் எதிர்பார்த்தது போலவே அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1889 ஆம் ஆண்டு பாரீசில் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் என்கிற கூட்டம் நடத்தப்பட்டது. பிரடெரிக் ஏங்கெல்ஸ் உள்பட பல நாடுகளில் இருந்தும் வருகை தந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் மே 1 ஆம் தேதி போராட்ட நினைவு அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் தினமான மே 1 கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் பல நகரங்களிலும் கம்யூனிஸ கருத்துகள் பரவி இருந்தாலும், சென்னை மாநகரில்தான் முதன்முதலாக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ இயக்க முன்னோடியாக இருந்த தொழிற்சங்க தலைவர் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டில் சென்னை மெரீனா கடற்கரையில் தொழிலாளர் தினத்தை அனுசரித்தார். அப்போதுதான் முதல் முறையாக இந்தியாவில் சிவப்பு கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. அதை நினைவுகூறும் விதமாக சிங்காரவேலர் மே தினம் அனுசரித்த இடத்தில் 1959 ஆண்டில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராடிய தொழிற்சங்க தலைவர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே, உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாகவும் மாறியது. அப்படியான வரலாற்றில் உருவான நாள்தான் இன்று.