நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரத்து 610) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முக கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 ஆயிரத்து 270) அபராதம் விதித்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக பாங்காக் கவர்னர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் வருகிற 1-ந்தேதி முதல் இந்திய பயணிகள் தாய்லாந்து வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்குமென்றும் அதே சமயம் இந்தியாவிலிருந்து தாய்லாந்து வரும் மக்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.