சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம்

இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுடன், தத்தமது பிரதேசங்களில் சகல உரிமைகளுடனும், தனித்துவமாகவும் வாழ வேண்டும். அந்த வகையில் பன்மைத்தன்மையுடன் கூடிய சமஸ்டி முறையிலான அல்லது அதனையொத்த இறைமையுள்ள ஒரு பொதுத் தேசியத்தை அவர்கள் மறுக்கவில்லை. எதிர்க்கவில்லை. இதில் சந்தேகமும் இல்லை.

ஆனால் இங்கு ஓர் ஒற்றை ஆட்சி நிலவ வேண்டும். அது சிங்கள பௌத்த தேசியத்தை மட்டும் முதன்மைப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். சிங்கள மொழி மாத்திரமே தேசிய மொழி. ஏனைய மொழிகள் வேண்டுமானால் தேசிய மொழிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அது ஏனோ தானோ என்ற நிலைப்பாட்டை மீறுவதாக இருக்கக் கூடாது.

சிங்கள பௌத்தம் மட்டுமே இந்த நாட்டின் ஒரே தேசிய மதம். அதற்கே முன்னுரிமை. அனைத்து முதன்மை நிலைகளையும், முதன்மை உரிமைகளும் அதற்கே வழங்கப்பட வேண்டும் என்றதொரு தேசிய கொள்கையை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனைய மொழிகளைப் பேசுபவர்களும், ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களும், ஏனைய கலை, கலாசார விழுமியங்களைப் பின்பற்றுபவர்களும் இரண்டாந்தரக் குடிமக்களாக இருக்க வேண்டும். வந்தேறு குடிகளாக, உரிமைகளற்றவர்களாக, இறைமையற்றவர்களாகவே வாழ வேண்டும். அவர்கள் இந்த சிங்கள பௌத்த, ஒற்றைத் தேசியத்தை ஏற்று ஒழுக வேண்டும். அவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் உரிமைகள் பற்றிப் பேசக் கூடாது.

அது பற்றிய சிந்தனையே அவர்களிடம் இருத்தல் ஆகாது என்பதே சிங்கள பௌத்த தேசியத்தின்  உட்கிடக்கை. உள்ளார்ந்த அசைக்க முடியாத கருத்து. உறுதியான நிலைப்பாடு. இதன் அடிப்படையிலேயே நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆட்சி செலுத்தி வருகின்றார்கள்.

ஆனால், இந்த நாட்டில் இரண்டு தேசிய மொழிகள் இருக்கின்றன. இரண்டு பிரதான தேசிய இனங்கள் வாழ்கின்றன. இரண்டு பிரதான கலை, கலாசார விழுமியங்கள் பின்பற்றப்படுகின்றன. அதையும்விட வேறு மொழி பேசுபவர்களும், வேறு தேசிய அடையாளங்களைக் கொண்ட மக்களும் சிறுபான்மையினத்தவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களும் தத்தமக்குரிய சிறப்பான அடையாளங்களையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டு வாழ்கின்றார்கள். இந்த உண்மையை யதார்த்த சமூக, அரசியல், மத, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதுவே இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் தாற்பரியம்.

இந்த வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை சுமார் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இழுத்தடித்து, வளர்த்தெடுக்கப்பட்டு, புரையோடிப் போயிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் எவருக்குமே விருப்பம் கிடையாது. அதனை ஒரு பிரச்சினையாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் வேறு வழிகள் எதுவுமற்ற ஏதிலி நிலையில் இந்த நாடு பிரிவினையை நோக்கி, தனித்தமிழ் ஈழத்தை நோக்கித் திசை திரும்ப நேரிட்டிந்தது. ஆனால் இந்த நாட்டுப் பிரிவினையை சிங்கள பௌத்த தேசியத்தில் ஊறிப் போயுள்ள ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தார்கள். அதனை அதிகார பலத்தின் மூலம், வன்முறைகளைப் பயன்படுத்தி அந்த அரசியல் திருப்பத்தை இல்லாமற் செய்வதற்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

அரசியல் வழியில் இணக்கப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இராஜதந்திர வழியில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டு, நாடு பிளவுபடுவதைத் தடுப்பதற்கு அவர்களால் முடியாமற் போனது. அந்த வழியில் சிந்திக்கவும் திராணியற்றவர்களாக இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அரசியல் தீர்வு காண்பதற்கு இணங்கி, இறங்கி வர மறுக்கின்றார்கள் அந்த ‘மறுப்புத் தேசிய இருப்பில்’ – தமது ஒற்றைத் தேசியத்தில், நாளுக்கு நாள் கணத்திற்குக் கணம் பிடிவாதமாக இறுகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டை சிங்கள பௌத்த தேசிய நாடாக உரு மாற்றிவிட வேண்டும் என்பதில் திட சங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகின்றார்கள். இந்த நிலைப்பாட்டை உள்நாடு என்ற சமூக, அரசியல் நிலைமையைக் கடந்து, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான இனவாத அரசியலுக்கான முயற்சிகளிலும் அவர்கள் தொடர்ந்தேர்ச்சியாகத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஆட்சி அதிகாரங்களுக்காக, தனித்துவ ஆட்சி உரிமை என்ற அற்பத்தனமான  சுய அரசியல் நலன்களுக்காக ராஜபக்சக்கள் அரசியலில் தலையெடுத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். இனவாதத்தையும் மதவாதத்தையும் சிங்கள மக்கள் மனங்களில் ஆழமாக விதைத்து, அதற்குத் தூபமேற்றியதன் மூலம் 2019 ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும், அந்த அரசியல் உத்தி – அரசியல் தந்திரம் வெற்றியளித்தது.

ஜனாதிபதி பதவியில் அதீத நலன்களை அனுபவித்த மகிந்த ராஜபக்சவின் வழியொட்டி, அவரது சகோதரர் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், இன, மதவாத அரசியலுக்கும், சிங்கள பௌத்த தேசியத்திற்கும் புத்துணர்வேற்படுத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் சிறுபான்மை இன மத குழுமங்களுக்கு இடையூறுகளை விளைவித்து வருகின்றார். அத்துடன் அவர்களது அடிப்படை இன, மத உரிமகளையும் சமூக, அரசியல், பொருளாதார, கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைகளையும் துச்சமாக மதித்து அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பலமுனைகளிலும் முடக்கிவிட்டிருக்கின்றார்.

discover-300x153.jpg

ஆனால் சிங்கள பௌத்த தேசியம் என்ற சிங்கள பௌத்த அரசியல் மதப் பண்பாட்டுக் கோட்பாடு இன்று பிளவுபட்ட நிலைமையை எட்டி இருக்கின்றது. இதற்கு வலுவான உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் பின்னணி காரணமாகி இருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான, பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான அதீத ஆயுத பலப்பிரயோகம் கொண்ட ஆயுத மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுகின்ற பொறுப்புடைமை இந்த அரசியல் அடித்தளத்தின் அத்திவாரமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமை மீறல்களிலும், போர்க்குற்றச் செயற்பாடுகளிலும் நேரடியாக ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவ பொறுப்பின் கீழ் இறுதிப் போர்க்காலத்து பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவும் பொறுப்பாளிகளாவர். இவர்களுடைய நேரடி கண்காணிப்பு மற்றும் உத்தரவுகள், யுத்த நடவடிக்கைகளுக்கான தீர்மானங்களின் அடிப்படையிலேயே இராணுவ அதிகாரிகள் செயற்பட்டிருந்தனர். இராணுவத்தினர் அதன் வழியில் யுத்த மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஆயுதமேந்தியிருந்த எதிராளிகளான விடுதலைப்புலிகளைப் போலவே அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிக்கியிருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி தமிழ்ப் பொதுமக்களையும், யுத்தத்தில் தாக்கி அழிக்கப்பட வேண்டிய எதிரிகளாகக் கருதி கட்டுக்கடங்காத வழிகளில் இராணுவத்தினர் செயற்பட்டிருந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு விஜயம் செய்த அப்பொதைய ஐ.நா மன்ற செயலாளர் நாயகம் பன் கீ மூன் இறுதி யுத்தச் செயற்பாடுகளில் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றிருந்ததை ஆதாரபுமூர்வமாக அறிந்து, அதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். அதற்கான பொறுப்பு கூறுலைச் செய்ய வேண்டும். எனவே, அதற்கான சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்று நேரடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தி இருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பொறுப்பு கூறலைச் செயற்வதுடன், யுத்தம் மூள்வதற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் பன் கீ மூனும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து ஐநா மற்றும் இலங்கை அரசு என்ற இருதரப்பினருடைய இணக்கப்பாட்டைத் தெளிவுபடுத்தி இணை அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவது என்பது தாங்களே நேரடியாக விரும்பி தற்கொலை செய்து கொள்வதாகவே முடியும் என்ற கசப்பான உண்மையை மகிந்த ராஜபக்சவும், கோத்தாபாய ராஜபக்சவும் உள்ளூரத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

இதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றக் கூடாது. முடிந்த அளவில் இழுத்தடித்து, அதனை இல்லாமற் செய்து விட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். உடனடியாகவே அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

அந்த நடவடிக்கைகள் ஜனரஞ்சகம் மிக்கதாகவும் சிங்கள மக்களினால் மறுப்பேதுமின்றி முழுமையாக ஏற்றுக்கொண்டு தங்களைப் பின்பற்றத்தக்கதாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் மிகுந்த கவனமாக இருந்தார்கள். அதன் விளைவாகவே யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்து, படுகாயமடைந்து உடல் உறுப்புக்களை இழந்து நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களாக இராணுவத்தை அவர்கள் முதன்மைப் படுத்தினார்கள்.

அந்த முதன்மையின் அடிப்படையில் நாட்டுக்காகத் தியாகம் செய்த இராணுவத்தினரை எந்தக் காரணத்தைக் கொண்டும். போர்க்குற்றச்சாட்டுக்களுக்கோ உரிமைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிற்கோ உள்ளாக்கி தண்டனை பெற அனுமதிக்கப் போவதில்லை என்ற தமது நிலைப்பாட்டை படிப்படியாக பௌத்த மதத் தலைவர்களது வாயின் ஊடாகவும், சிங்கள பௌத்த தேசியத்தின் மீது பற்றுள்ள அரசியல் கட்சிகளின் ஊடாகவும் வெளிவருமாறு பார்த்துக் கொண்டார்கள்.

அத்தகைய திரட்சி மிக்க மக்களுடைய குரல் ஓங்கி ஒலிப்பதற்கு ஏதுவாக, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைத் தங்களது அரசியல் கொள்கையாக படிப்படியாக வெளியிட்டு அந்தக் குரலுக்கு வலிமை சேர்த்தார்கள்.

இந்த அரசியல் தந்திரோபாயம் சிங்கள மக்கள் மத்தியிலான அவர்களது அரசியல் செல்வாக்கை வளர்ந்தோங்கச் செய்தது. ஏனைய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும்கூட அந்த வழியிலேயே சிந்திக்கவும் செயற்படவும் தக்கதான ஓர் அரசியல் நிலைமையை அவர்கள் உருவாக்கி விட்டார்கள். இந்த வகையிலேயே அவர்கள் தமது இராணுவ வெற்றியை இனவாத, மதவாத அரசியலுக்கான முதலீடாகக் கொண்டு 2015 தேரதல்களில் தோல்வி அடையச் செய்த பின்னரும் 2019 இல் சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

உள்ளூர் அரசியலில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக மீண்டெழுந்த ராஜபக்சக்கள், சர்வதேச ரீதியில் தொடர்ந்த பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தை முறியடித்துத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், போர்க்குற்றச் செயற்பாடுகளில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாகவே சீனாவுடன் நெருங்கிய வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்துக் கொண்டார்கள்.

சீனாவின் விருப்பங்களை நிறைவேற்றி, சர்வதேச அரங்கில் பொறுப்பு கூறுகின்ற விடயம் பெரும் விவகாரமாக மாறி, தங்களுக்குத் தீங்கு நேராத வகையில் சீனாவைத் தங்களது சர்வதேச அரசியல் கவசமாக ராஜபக்சக்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சீனாவின் உதவியுடன் பொறுப்பு கூறுகின்ற சர்வதேசத்தின் வலியுத்தலை முறியடித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்ததோர் இராஜதந்திர மார்க்கமாகவே கொழும்பு துறைமுக நகரத்தை அவர்கள் இப்போது பயன்படுத்தி உள்ளார்கள்.

கொழும்பு துறைமுக நகரத்தை முழுக்க முழுக்க சீனாவின் நேரடி கண்காணிப்பில் அதன் பொறுப்பில் செயற்படப் போகின்ற ஒரு சர்வதேச வர்த்தக மையமாக உருவாக்குவதே ராஜபக்சக்களின் திட்டம். இந்து சமுத்திரத்தின் மிகச் சிறிய தீவாகிய இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் வளர்ச்சி பெறச் செய்கின்ற ஒரு மாயத் தோற்றத்தை அவர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்.

download.jpg

முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற கடப்பாட்டில் கட்டுப்பாடற்ற கடன் தொல்லைக்கு ஆளாகிய இலங்கை சர்வதேச ஆட்கொல்லியாகிய கோவிட் – 19 இன் பாதிப்புக்கு உள்ளாகி பொருளாதாரத்தில் மேலும் மோசமான பின்னடைவுக்கு ஆளாகியது. இந்த நிலைமையில் இருந்து தலை நிமிர்த்துவதற்கு உரிய கடன் வசதிகளைச் செய்ய நிபந்தனையற்ற வகையில் சீனா முன்வந்தது.

சீனாவின் நிபந்தனையற்ற இந்த நிதியுதவி அணுகுமுறையானது, அதன் சர்வதேச வர்த்தக பாதுகாப்புச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது. அதற்கான நோக்கங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அது இலங்கையின் பலவீனமான பொருளாதார நிலைமையைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்ற சந்தர்ப்பமாக சீனாவுக்கு இது அமைந்துவிட்டது. தனது பட்டுப்பாதை விரிவாக்கத்திற்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க புள்ளியாக இலங்கையைக் கையகப்படுத்துகின்ற அதேவேளை இந்து சமுத்திரத்தின் பொருளாதார, இராணுவ பாதுகாப்பு நிலைமைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொண்டையில் சிக்கிய முள்ளாக மாற்றி, அவர்களின் செல்வாக்கை முறியடிப்பதற்கும் வசதியாக சீனா மாற்றிக் கொண்டுவிட்டது.

இந்த நிலைமையானது ராஜபக்சக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் தூக்குக் கயிறை எதிர்கொள்கின்ற நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்தவற்கான கவசமாக சீனாவைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது,

பொறுப்பு கூறுகின்ற விவகாரத்தில் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பாதுகாக்கின்ற அதேவேளை, பொருளாதார ரீதியில் அதனை வளர்ச்சி அடையச் செய்கின்ற போக்கில் உறுதியாக இலங்கையில் காலூன்றுவதற்கான அருமையான மார்க்கமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சீனாவுக்கு வாய்த்து விட்டது.

ஆனால், சிங்கள பௌத்த தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளூர் அரசியலில் கொடி கட்டிப் பறந்த ராஜபக்சக்கள் சீனாவைக் கையாள்கின்ற விடயத்தில் பௌத்த மதத் தலைவர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற முடியமல் போயுள்ளது. ராஜபக்சக்களின் ஆட்சி அதிகார மீள்வருகைக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவராகிய அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவப் பிரதேசமாக மாறும் என தெரிவித்து அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.

அதேபோன்று ராஜபக்சக்களின் முக்கிய ஆதரவாளராகிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச துறைமுக நகரத்தை முழுமையாக சீனாவுக்குத் தாரை வார்க்கத்தக்க துறைமுக ஆணைக்குழு அங்கு ஒரு தனிநாட்டை உருவாக்க வல்லது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ராஜபக்சக்களின் அரசியல் வாழ்க்கைக்கும், இருப்புக்கும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ள சீனச் சார்பு வெளிவிவகார நிலைப்பாட்டிலான கொழும்பு துறைமுக நகரத்தின் பொறுப்புடைமை உரிமைக்கு பௌத்த பிக்குகள் மத்தியில் இருந்தும், ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடின அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவராகக் கருதப்படுகின்றவருமாகிய விஜயதாச ராஜபக்சவிடம் இருந்தும் கிளம்பியுள்ள எதிர்ப்புக்கள் ராஜபக்சக்களின் பௌத்த தேசிய கோட்பாட்டைப் பிளவுபடச் செய்திருக்கின்றது.

Wijedasa-Rajapaksa.jpg

துறைமுக ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிராகக் கிளம்பியுள்ள நீதிமன்ற வழியிலான ஏனைய பலருடைய எதிர்ப்பும் ராஜபக்சக்களை கொழும்பு துறைமுக நகர விவகாரம் சந்தியில் நிறுத்தி நிலை தடுமாறச் செய்திருக்கின்றது.

இந்த நிலைதடுமாற்றமே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, கொழும்பு துறைமுக நகரம் பற்றிய விஜயதாச ராஜபக்சவின் கடுமையான கருத்துக்களுக்கு எதிராக தொலைபேசி முலம் தகாத வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக அச்சுறுத்தச் செய்திருக்கின்றது.

 பி.மாணிக்கவாசகம்