சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட‌ன.

இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம் கொண்டவை என சீனா கடுமையாக விமர்சித்தது. மேலும் இந்த விவகாரம் ஆஸ்திரேலியா சீனா இடையிலான உறவை மோசமாக்கியது. இந்த நிலையில் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

சீனாவின லட்சிய திட்டமான “பெல்ட் மற்றும் சாலை” திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசுடன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சீன அரசு ஏற்படுத்திக் கொண்ட 2 ஒப்பந்தங்களைதான் ஆஸ்திரேலியா தற்போது ரத்து செய்துள்ளது.

இது தவிர விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999-ம் ஆண்டு சிரியாவும் 2004-ம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட 2 ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.