இந்தியாவில் தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை தனது சேவைகளைத் தொடங்குகிறது.
1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது.
1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு வந்துள்ளது.
அதில் நான்கு புதிய இந்திய மொழிச்சேவைகளும் அடங்குகின்றன. தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி மொழிச்சேவைகளின் துவக்கம் காரணமாக அந்த பிராந்தியத்தில் 157 புதிய வேலைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு வெளியிலான பிபிசியின் மிகப்பெரிய அலுவலகமாக பிபிசி தில்லி வளர்ச்சியடைகிறது.
இந்த விரிவாக்கத்தின் கீழ் ஏழு வேறு மொழிச்சேவைகளும் துவக்கப்படுகின்றன. அஃபான் ஒரொமோ, அஹ்மாரிக், இக்போ, கொரியன், பிட்ஜின், திக்ரின்யா மற்றும் யொருபா ஆகிய மொழிச்சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் மூலம் பிபிசி உலக சேவை, ஆங்கிலம் உட்பட, 40 மொழிகளில் நேயர்களுக்குக் கிடைக்கும். இதன் மூலம் உலகின் பல் வேறு இடங்களில் கூடுதலாக பிபிசி செய்தியாளர்கள் இருப்பார்கள்.
பிபிசியின் உலகசேவை தனது டிஜிட்டல் சேவைகளை விரிவாக்கவுள்ளது. அதன் மூலம் கைபேசி, காணொளிச் செய்திகளை அதிகரிப்பதோடு சமூகஊடகங்கள் மூலமும் உலக அளவில் தனது பயன்பாட்டாளர்களை சென்றடையவிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்குக்கான சேவையாக மட்டும் துவக்கப்பட்ட தாய் மொழிச் சேவை இன்று முதல் முழுமையான டிஜிட்டல் சேவையாக விரிவடைகிறது.
இந்த விரிவாக்கத்தில் பிபிசி கீழ்கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளன:
•கைபேசிகளுக்கான இந்திய மொழிச் சேவைகளில் டிஜிட்டல், தொலைக்காட்சி மற்றும் காணொளிச் சேவைகளைத் துவக்குதல்
•ரஷ்ய மொழியின் செய்திச் சேவைகளின் நேரத்தை அதிகரித்தல். அதன் அண்டை நாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிராந்திய ரீதியிலான இணையதளங்களை துவக்குதல். புதிய டிஜிட்டல் வடிவங்கள் மற்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
•சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பிராந்தியங்களில் இருக்கும் பிபிசியின் கூட்டு செய்திச் சேவைகளுக்காக முப்பது புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை துவக்குவது உட்பட ஆப்ரிக்கா நெடுகிலும் தொலைக்காட்சி சேவைகளை அதிரித்தல்.
•புதிய பிராந்திய சேவைகளை துவக்கி அதன் மூலம் அரபு நாடுகள் நெடுகிலும் பிபிசி அரபு சேவையை விஸ்தரித்தல்
•கொரிய தீபகற்பத்திலுள்ளவர்களுக்காக சிற்றலை மற்றும் மத்திய அலைவரிசை வானொலிச் சேவைகளை நடத்துவதோடு அதற்கு வலுவூட்டும் விதமான டிஜிட்டல்சேவையை இணையம் மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் செயற்படுத்துதல்.
•பிபிசியின் உலக சேவையின் ஆங்கிலப் பிரிவில், புதிய நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளின் நிகழ்ச்சி நிரலை விரிவாக்குவதற்கும் சொந்தமாக செய்தி சேகரிப்பதற்கும் கூடுதல் முதலீடு செய்தல்.
•பிபிசி உலக சேவையின் நாற்பது மொழிகளும் காணொளிகளை வழங்கவல்ல சேவைகளாக ( தொலைக்காட்சி உட்பட) மாற்றும் வகையில், டிஜிட்டல் மயமாக்கலை தொடர்தல்.
•செய்திகளை விரிவாக அலசி ஆராய்வதற்கும், விளக்குவதற்கும் தனது உலகளாவிய இருப்பை பயன்படுத்துதல் அல்லது உலக நடப்புகள் என்னென்ன? அவை ஏன் நடக்கின்றன என்பது குறித்து விளக்குவதன் மூலம் “வேகம் குறைந்த” செய்திகளை அளித்தல்.
பிபிசியின் இயக்குநர், டோனி ஹால் கூறுகையில்:
“1940 ஆண்டுக்குப்பின் பிபிசி உலக சேவையின் மிகப்பெரிய விரிவாக்கத்தை அறிவிக்கும் இந்த நாள் பிபிசிக்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். (எங்களுக்கு கிடைத்த அதிகரித்த நிதியுதவியால் இது சாத்தியமானது). பிபிசி மற்றும் பிரிட்டனின் மணி மகுடத்தில் இருக்கும் வைரக்கல் பிபிசி உலக சேவை”.
“எங்களின் நூற்றாண்டை நோக்கி நாங்கள் செல்லும் தருணத்தில், பிபிசி என்பது தன்னம்பிக்கை மிக்கதாக, விரிந்த பார்வை கொண்டதாக செயற்படுவதன் மூலம் சுயாதீனமான, நடுநிலை ஊடக செயற்பாட்டையும் உலக தரத்திலான பொழுதுபோக்கையும் உலக அளவில் ஐம்பது கோடி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே எனது எதிர்கால திட்டமாக இருக்கும். இன்றைய நிகழ்வு அதை அடைவதற்கான முக்கிய முன்னெடுப்பாக அமையும்”.
ஃபிரான்கெஸ்கா உன்ஸ்வொர்த், பிபிசி உலக சேவை இயக்குநர் கூறுகையில்,
“போர், புரட்சி மற்றும் உலக மாற்றங்கள் எதுவாயினும் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்பவர்கள் சுயாதீனமான, நம்பகத்தன்மை மிக்க, பக்கச்சார்பற்ற செய்திகளுக்கு பிபிசியையே நாடி வந்திருக்கிறார்கள். சுயாதீனமிக்க ஒலி/ஒளிபரப்பு நிறுவனம் என்கிற அடிப்படையில், பல இடங்களில் கருத்து சுதந்திரத்தின் அளவு குறைவாக இருக்கும் சூழலில் இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் எங்கள் சேவை மிகவும் தேவைப்படுகிறது.
“எதிர்காலத்துக்கானதாக உலக சேவையை மாற்றுவதற்குத் தேவையான முதலீடு செய்யப்படுவதை இன்றைய அறிவிப்பு தெரிவிக்கிறது. மாறிவரும் வழிகளில் செய்திகளை அணுகத்துவங்கியுள்ள எமது பயன்பாட்டாளர்களை நாங்கள் பின் தொடரவேண்டும். பிபிசி உலக சேவையை, தொலைக்காட்சி மூலம் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல சேவைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மட்டுமே செயற்படுகின்றன. எங்களின் டிஜிட்டல் உருமாற்றத்தை வேகப்படுத்துகிறோம். குறிப்பாக இளவயது பயனாளர்களுக்காக. காணொளி செய்திச் சேவைகளில் தொடர்ந்தும் நாங்கள் முதலீடு செய்யவிருக்கிறோம். அதேசமயம் எங்களின் சுயாதீனமிக்க, பக்கச்சார்பற்ற ஊடக செயற்பாட்டுக்கான எங்களின் கடப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.”
இளவயதினர் மற்றும் பெண்களை சென்றடைவதற்கு பிபிசி உலக சேவை கூடுதல் கவனம் செலுத்தும்.
உலக அளவில் 2022 ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் பயன்பாட்டாளர்களை பிபிசி சென்று சேரவேண்டும் என்று பிபிசியின் தலைமை இயக்குனர் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.
சென்ற ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கம் பிபிசி உலக சேவைக்கு அறிவித்த அதிகரித்த நிதி உதவியின் பயனாக இந்த விரிவாக்கம் சாத்தியமாகியிருக்கிறது.முதல் தொகுதி புதிய மொழிச் சேவைகள் 2017 ஆம் ஆண்டு துவக்கப்படும்.
Eelamurasu Australia Online News Portal