20ஆவது திருத்தத்தை போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மையுடன்…….

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை போன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம். 20 இல் சில உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டமையால் அவற்றை நீக்கினோம். அதே முறைமை துறைமுக நகர சட்ட மூல விவகாரத்தில் பின்பற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமை காணப்படுகிறது. அந்த நடைமுறையே தற்போது இடம்பெறுகிறது. இது சாதாரணமானதொரு விடயமாகும். சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டால் அதனை முதற்கட்டமாக அமைச்சரவையில் சமர்பித்து, அனுமதி பெற்றுக் கொண்ட பின்னர் சட்டமூல திணைக்களத்திற்கும் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்படும்.

இதன் போது குறித்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என்ற நிலைப்பாடு கோரப்படும். இந்த சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் நிலைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டமா அதிபரின் நிலைப்பாடு ஸ்திரமானதாகக் காணப்படாது. நீதிமன்ற செயற்பாடு இதிலிருந்து மாறுபட்டதாகும்.

நீதிமன்றத்தில் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இதன் போது வழங்கப்படும் தீர்ப்பிற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இது அரசியலமைப்புக்கு முரணானது , அல்லது இல்லை, சில உறுப்புரைகளை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும், அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் அல்லது சர்வசன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று பலவாறு தீர்ப்புக்கள் வழங்கப்படக் கூடும்.

இதற்கு சிறந்த உதாரணம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஆகும். 20 இல் சில உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் கூறப்பட்டது. எனவே அந்த உறுப்புரைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். நாட்டுக்கு மேலுமொரு சுமையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதில் சிக்கல் இல்லை. எனினும் அதனை ஒரு சுமையாகவே நாம் பார்க்கின்றோம்.

இதே வழிமுறையையே துறைமுக நகர விவகாரத்திலும் நாம் பின்பற்றுகின்றோம். மாறாக எதிர்தரப்பினர் கூறும் வகையில் இதில் எந்த விடயமும் மறைக்கப்படவில்லை. அத்தோடு சீன காலணி என்ற ஒரு சொல் கூட இதில் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.