‘தர்மதுரை’ திரைப்படத்துக்கு ஆசியா விஷன் விருதுகள்

நல்ல நோக்கத்திற்காகவும், மனித உணர்வுகளின் மேம்பாட்டுக்காகவும் எடுக்கப்பட்ட ‘தர்மதுரை’ திரைப்படத்துக்கு 4 ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் கிடைத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆசியா விஷன் திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்பட பிரிவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.

ஸ்டுடியோ 9 ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான ’தர்மதுரை’வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு படம்.

நவம்பர் 18-ஆம் தேதி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரிவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம் – தர்மதுரை

சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி

சிறந்த நடிகை -தமன்னா

மேலும், இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விருதுகள் பெறுகின்றனர்.

தர்மதுரை திரைப்படத்திற்கு 4 ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் கிடைத்தது குறித்து இத்திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் , ”தர்மதுரை திரைப்படத்துக்கு மக்களின் அபிமானம் மற்றும் வாக்குகளால் விருது வழங்கப்படுகிறது என்று இந்த விருது வழங்கும் ஜுரீகள் தெரிவித்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

‘தர்மதுரை’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை எதிர்பார்த்த அளவில் பெற்றது.

இத்திரைப்பட கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகி தமன்னா ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அதே போல், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷின் பங்கும் அளப்பரியது” என்று குறிப்பிட்டார்.