“என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன!”-அலி

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட போதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கான விசாவைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அல்லது அவ்விசாவைப் பெறுவதே சாத்தியமற்றதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நான்கு மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஸ்வான் ஹில் ஆஸ்திரேலியாவின் உணவுக் கிண்ணமாக வர்ணிக்கப்படுகிறது. பெருமளவிலான பாதாம் பருப்பும் திராட்சைகளும் தயாரிக்கக்கூடிய பகுதியாக இது இருக்கிறது.

இப்பகுதியில் பெரும் உற்பத்தி நடக்கக்கூடிய காலங்களில், பல அகதிகள் உள்பட சுமார் 10 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான சமூக வாழ்க்கையை தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான ‘அலி’ கடந்த 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது, அவரது 6 குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவியையும் பிரிந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நிலை மாறவில்லை. அவரது குழந்தைகளையும் மனைவியையும் இத்தனை ஆண்டுகளாக காணாமல் இருப்பது ஆப்கான் அகதியான அலியை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது.

“என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொலைபேசி வழியாக மட்டுமே அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அலி.

65 வயதான அவர், ஆப்கானிஸ்தானில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர். போர் சூழல் காரணமாக அவர் கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் அவர் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தனது குடும்பத்துக்கு விசாக்கள் பெற சுமார் 10,000 ஆஸ்திரேலிய டாலர்களை செலவழித்திருக்கிறார். ஆனால், படகு வருகைகள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் கடுமையான குடிவரவுக் கொள்கைகளினால் ஆப்கான் அகதியான அலியினால் அவரது குடும்பத்தினருக்கு விசா பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு படகு வருகைகளை ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்திலிருந்து அப்போதைய லேபர் அரசாங்கம் நீக்கியது. இதனால் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகள் தங்கள் குடும்பத்தினரை அழைப்பது என்பது சாத்தியமற்றதானது. பின்னர் வந்த லிபரல் அரசாங்கமும் படகு வழியாக வந்து நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழும் அகதிகள் சமர்பிக்கும் குடும்ப மீள் ஒன்றிணைவுக்கான விசாக்களுக்கு குறைந்த அளவிலான முன்னுரிமையையே வழங்கும் நிலை உள்ளது.