மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்?
கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது.
ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19 ஆம் திகதி கூட்டவிருக்கின்றார். தேர்தல்களை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும், பதவிக் காலம் முடிவுக்கு வந்து மூன்று வருங்களுக்கு மேல் சென்றிருக்கின்ற போதிலும், அவை தொடர்ந்தும் ஆளுநரின் ஆட்சியில் இருப்பதுதான் இந்தத் தீர்மானத்துக்குக் காரணம். ஆனால், அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் சொல்லிக்கொள்வதைப்போல, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பௌத்த அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கை
பலம்வாய்ந்த 14 பௌத்த அமைப்புக்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பிவைத்துள்ளன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் முடிவை உடனடியாக நிறுத்துமாறும், அவ்வாறு தேர்தலை நடத்துவது மக்களுடைய ஆணைக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயற்பாடு எனவும் அந்த அமைப்புக்கள் இந்தக் கடிதத்தின் மூலமாக சுட்டிக்காட்டியிருக்கின்றன.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நோக்கி அரசாங்கம் செல்வதை எவ்வகையிலாவது தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்புக்கள் உறுதியாகக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன.
விரைவில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தமைக்கு இந்த ஜெனிவா தீர்மானம் மட்டும் காரணமல்ல. ‘கோவிட் -19’ ஐ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இவ்வருட நடுப்பகுதியில் நடத்தினால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்க மட்டத்திலும் காணப்பட்டது. அதற்கேற்றவாறு சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பெருமளவு கோவிட் தடுப்பூசிகளும் பெறப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாடு என்ற பெருமையுடன் தோர்தலுக்குச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு அரச தரப்பில் காணப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் கோவிட் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதும் உண்மைதான்.
அரசுக்குள் உருவாகும் புதிய குழப்பங்கள்
ஆனால், அரசாங்கத்தின் சமீபத்திய நகர்வுகள் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறுமா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. முக்கியமாக – உருவாகியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை – விலைவாசி உயர்வு என்பவற்றை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது. இதனைவிட ஆளும் கூட்டணிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலை தேர்தல் குறித்து சிந்திக்க முடியாத நிலையை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனைவிட மற்றொரு காரணமும் முக்கியமானது. ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்துக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தாதிருப்பது என்ற தெரிவை நோக்கியே அரசாங்கம் செல்ல வேண்டியிருக்கின்றது.
அதில் ஒரு அங்கம்தான் பௌத்த சிங்கள அமைப்புக்கள் மூலமாகக் கோரிக்கைகளை முன்வைப்பது. 14 அமைப்புக்கள் இணைந்து அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு வரைவுக் குழு, அதன் பரிந்துரைகளை முன்வைக்க முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, அமைச்சரவையின் தூரநோக்கற்ற செயற்பாடாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டால், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஏற்ப அரசு செயற்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பெளத்த அமைப்புகள் எச்சரித்துள்ளன. வாக்களித்த மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பை அரசு குறுகிய காலத்தில் மறந்தமை கவலையளிக்கின்றது எனவும் பெளத்த அமைப்புகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளன.
தேர்தல் முறை குறித்த குழப்பம்
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு – அரசியலமைப்பு ரீதியாக தற்போது தடையாக இருப்பது எந்த முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பதில் காணப்படும் சிக்கல்தான். முன்னைய முறையில் – அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தலை நடத்துவதாயின், பாராளுமன்றத்தில் கொண்டுவரக் கூடிய ஒரு சிறிய திருத்தத்தின் மூலமாக மாகாண தேர்தலை நடத்த முடியும். அவ்விடயத்தில் அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஒன்று ஏற்கனவே உள்ளது.
ஆனால், அரச தரப்பு அதில் இப்போது புதிய குழப்பங்களை ஏற்படுத்துவதாகவே தெரிகின்றது. கலப்பு முறையில் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் இப்போது ஆராயத் தொடங்கியுள்ளது. இதன்படி தேர்தல்களை நடத்துவதாயின் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த எல்லை நிர்ணய விடயத்தில் ஏற்பட்ட குழப்பங்களால்தான் கலப்பு முறையில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பது என்ற முடிவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஏற்கனவே எடுத்திருந்தன.
ஆனால், மீண்டும் கலப்பு முறையிலான தேர்தல் குறித்து ஆராய்வதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், இது குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றது. நிச்சயமாக காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இது இருக்க முடியும்.
இந்தக் குழுவின் முடிவு, அதனைச் செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் இலகுவானதல்ல. இவை அனைத்தையும் செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவை என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த வாரம் தெரிவித்தார். ஆனால், இதற்கு ஒரு வருடமாவது தேவைப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லை தெரிவித்திருக்கின்றார். எப்படிப் பார்ததாலும் இவ்வருடத்துக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் காண முடியவில்லை.
அரசிடம் உள்ள இரு உபாயங்கள்
மாகாண சபைத் தேர்தல்களைத் தாமப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இப்போது இரண்டு உபாயங்கள் காணப்படுகின்றன. ஒன்று – தேர்தல் முறை மாற்றம். இரண்டாவது புதிய அரசியலமைப்பு. இந்த இரண்டையும் வைத்து இந்தியாவுக்கும், ஜெனிவாவில் தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்கும் பதிலளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்து விட்டதாகவே தெரிகின்றது. அதாவது, ஜெனிவா தீர்மானத்துக்கு முரணாகச் செயற்படுவதன் மூலம் தமது சிங்கள – பௌத்த கடும் போக்காளர்களைத் திருப்திப்படுத்த அரசு முற்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஜெனிவாவுக்குப் பதிலளிக்க அதற்கு வேறு தெரிவுகள் இல்லை என்பதும் உண்மை.
ஜெனிவா தீர்மானம் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடு என்ற கருத்து அரச தரப்பால் மட்டுமல்ல, பௌத்த சிங்களக் கடும் போக்காளர்களாலும் முன்வைக்கப்படுகின்றது. அதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் புலம்பெயர்ந்த அமைப்புக்கள், அவற்றின் யெற்பாட்டாளர்கள் மீதான தடையை கடந்த வாரத்தில் அரசாங்கம் அதிரடியாக அறிவித்தது. இப்போது, மாகாண சபைகளுக்கான தேர்தல்ளை பிற்போடுவதற்கான உபாயங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரதமர் அடுத்த வாரம் கூட்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டாலும், முன்னைய முறையில் தேர்தலை நடத்துவது என அதில் தீர்மானம் எடுக்கப்பட்டால் மட்டுமே அடுத்த சில மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கலப்பு முறையில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டால், தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது என்பதே அதன் அர்த்தமாக இருக்கும். நல்லாட்சி அரசும் இதேபோன்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியே தேர்தலை தவிர்த்து வந்தது. அதேபோன்ற ஒரு நடைமுறையைத்தான் தற்போதைய அரசும் பின்பற்றப் போகின்றதா?
அகிலன்