மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியான்மரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில் மியான்மரின் தற்போதைய நிலைமை 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையால் அடக்கப்பட்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்ததை சுட்டிக்காட்டி மைக்கேல் பேச்லெட் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியான்மரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.