‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ‘பசங்க-2’, ‘சவரக்கத்தி’ என தொடர்ந்து தற்போது விஷால் நடித்துவரும் ‘துப்பறிவாளன்’, ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்துவரும் ‘அண்ணனுக்கு ஜே‘, ‘இணையதளம்‘ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வரும் அரோல் கொரேலி, நவம்பர் 2ஆம் திகதி ரீத்தா தேவியை மணம் முடித்தார். எந்த அறிவிப்பும் இன்றி திடீரென நடந்த இந்த திருமணம் காதல் திருமணமா..? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..?
“கடந்த அஞ்சு வருஷமா எங்க வீட்டுல தீவிரமா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அப்படி சமீபத்தில் பார்த்த பொண்ணு தான் ரீத்தா தேவி. இவங்களுக்கு தேனி மாவட்டம் போடி தான் சொந்த ஊர். அங்க தான் இன்ஜினியரிங் படிச்சிருக்காங்க. பார்த்ததும் இரண்டு பேருக்கும் பிடிச்சுப்போச்சு, உடனே டும் டும் டும் தான். நவம்பர் 2ஆம் தேதி திருப்பதியில் கல்யாணம் நடந்தது. அதுக்கப்பறம் சென்னையிலையும் போடியிலையும் வரவேற்பு வெச்சோம். இப்போ சென்னைக்கு வந்து செட்டாகிட்டோம்” என்ற அரோல் கொரேலி, “எனக்கு என்ன பேசுறதுனே தெரியலை, நான் ரீத்தாகிட்ட போனைக் கொடுக்குறேன். பேசுங்க” என்று ரிசீவரை கை மாற்றினார்.
“கல்யாணத்துக்கு முன்னாடி இவரை எனக்கு தெரியாது. இவர் இசையமைத்த ‘பிசாசு’ படத்தின் பாட்டு எனக்கு பிடிக்கும். ஆனால், அந்த படத்திற்கு இளையராஜா தான் மியூசிக்னு நினைச்சேன். அரோல் கொரேலினு ஒரு இசையமைப்பாளர் இருக்காருன்னே எனக்கு தெரியாது. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவே இல்லை. இவர் எனக்கு தூரத்து சொந்தம்கிறதால என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. அப்போ தான் இவர் பிசாசு, பசங்க-2 படத்துக்கெல்லாம் இசையமைப்பாளர்னு தெரியும். அதுக்கப்பறம் தான் நெட்ல இவரோட இன்டர்வியூ எல்லாம் பார்த்தேன். அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப அமைதினு நினைச்சேன். ஆனால், பேசி பழகுனதுக்கு அப்பறம் தான் இவர் அமைதி இல்லைன்னு தெரிஞ்சது” என்றவரிடம், ‘சினிமாவில் இருக்குற ஒருத்தரை கல்யாணம் பண்ணப்போகிறோம்கிற விஷயம் தெரிஞ்சதும் என்ன தோணுச்சு..?” என்று கேட்டோம்.
“எனக்கு அப்போ எதுவும் தோணலை. அதுக்கப்பறம் கல்யாணத்துக்கு சினிமா பிரபலங்கள் எல்லாரும் வரும் போது ரொம்ப சந்தோஷமாகவும் லைஃப்ல மாற்றம் வரமாதிரியும் ஃபீல் ஆச்சு. கல்யாணம் முடிஞ்சதும் ஒரு நாள் மட்டும் மூணார் போய்ட்டு வந்தோம். இப்போ ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்” என்று சந்தோஷமாக பேசி முடித்தனர் அரோல் கொரேலி மற்றும் ரீத்தா தேவி.