ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற மேல்முறையீடும் தோல்வியில் முடிந்துள்ளது.
ஈராக்கிய அகதியான Fares Al Kilaby ஆஸ்திரேலியாவில் கடந்த 2013ம் ஆண்டு படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். தனது தாய்நிலத்தை விட்டு மிகவும் மோசமான வன்முறை நிகழ்ந்த காலத்தில் அதிலும் ஐ.எஸ். வளர்ந்து வந்த காலத்தில் ஈராக்கிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் Fares மற்றும் அவரது குடும்பம் தஞ்சக்கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டை நிராகரித்ததால், அவருக்கு கிடைத்து வந்த அரசின் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி அவருக்கு ஆஸ்திரேலியாவில் கார் விபத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து கிடைத்ததாகும்.
“எனது வழக்கறிஞர் என் தஞ்சக்கோரிக்கை தொடர்பான வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால் இனி என்னால் ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய முடியாது என்றும் தெரியவித்தார்,” என்கிறார் Fares.
தங்கள் குடும்பம் மேலும் ஏதேனும் மேல்முறையீட்டனை செய்ய இயலுமா என்பது உறுதிப்படத் தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார் Fares. இந்த வழக்கின் முடிவினால் இவர் ஆஸ்திரேலியாவில் வேலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பம் வீடற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவரைப் போலவே, கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர். அதில் பெருமளவிலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் நிச்சயத்தன்மையற்ற நிலையிலேயே வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இதில் பலருக்கு பாதுகாப்பு விசாக்களும், தற்காலிக விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம், இந்த சூழல் 2013ம் ஆண்டில் முற்றிலும் வேறாக மாறியது. படகு வழியாக வரும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் கீழ் சிறைவைக்கப்பட்டனர். இவ்வாறான சூழல் படகு வழியாக வந்த பல அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் எவ்வித நிரந்தர தீர்வும் எட்டப்படாத நிலையிலேயே தற்காலிக விசாக்களிலும் தடுப்பு முகாம்களிலும் பல அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா அல்லது வேறொரு நாட்டில் மீள்குடியமர்த்தப்படுவார்களா அல்லது நாடுகடத்தப்படுவார்களா என எவ்வித தெளிவுமின்றி நிச்சயத்தன்மையற்ற நிலையில் இந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.