பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் 10, 12, 13 மற்றும் 14 ஆம் சரத்துகளில் உள்ள உரிமைகளை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மீறுகின்றமைக்கு எதிராகவே குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் நாட்டு பிரஜைகளின் பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த விதிமுறைகள் பரந்த அளவில் காணப்படுவதால் நடைமுறைப்படுத்தும் போது அது சட்டவரையறையை மீறக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் ; மேற்பார்வைக்கான பொறிமுறை காணப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகார வரையறையை மீறும் வகையில் இந்த புதிய விதிமுறைகளில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன, மத அடிப்படையில் எதிர்மறையான கருத்துக்களை தோற்றுவிக்கக் கூடியதாகவும் இன, மத குழுக்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை செலுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.