கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.
இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இதன் பிறகு அந்த வைரஸ் பல மாற்றங்களை பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கு தகுந்தமாதிரி அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன.
இதன் அடிப்படையில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் பல வித உருமாறிய கொரோனா வைரசுகள் பரவி வருகின்றன. அவை வீரியம் கொண்டவையாக உள்ளன. இவை மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல சில வைரஸ்கள் இரட்டை உருமாற்றத்தை பெற்று இருக்கின்றன. இந்தியாவிலும் இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி முதலில் இந்த இரட்டை உருமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மத்திய அரசின் ஆய்வகம் ஆய்வு செய்தது. இந்தவைரசுக்கு தற்போது பி-1-617 என்று பெயரிட்டுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு பி.1.1.7 என்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கும் பி.1.351 என்றும் பெயர் சூட்டி இருந்தனர்.
அந்த வரிசையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரசுக்கு பி-1-617 என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
பி-1-617 வைரஸ் மராட்டிய மாநிலத்தில் அதிகளவில் பரவி இருக்கிறது. உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்காளம் ஆகியவற்றிலும் அதிகளவில் தென்படுகின்றன. ஆனால் இவை எந்தெந்த மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன என்பது பற்றி ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.
மேலும் இந்த வைரஸ் எத்தகைய தன்மை கொண்டது என்பது பற்றி இனி மேல்தான் ஆய்வு செய்ய வேண்டும். அதாவது இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு எப்படி இருக்கும்? தடுப்பு மருந்துகள் இதை முழுமையாக கட்டுப்படுத்துமா என்பது போன்றவற்றை இனி ஆய்வு செய்ய வேண்டும்.
கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது.