நெல்சிப் ஊழல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டிருந்ததா?

வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது.

நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவரை கொண்ட குழுவொன்று 2015ம் ஆண்டின் பெப்ரவரி நியமிக்கப்பட்டிருந்த போதும் அதன் அறிக்கை அதே ஆண்டின் நவம்பர் மாதம் வடமாகாணசபை வசம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் நெல்சிப் ஊழல்கள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை ஆளுநரிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கையும் கிடைக்கப்பெற்று ஒருவருடம் கடந்து சபைக்கு சமர்ப்பிக்கப்படாதிருந்தமை அம்பலமாகியிருந்தது.

இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர்களது அழுத்தங்களையடுத்து சுமார் ஒருவருட இடைவெளியின் பின்னராக குறித்த அறிக்கை அண்மையில் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களிற்குள்ளாகியிருந்தது.

கூட்ட முடிவில் பாரிய ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணை குழவின் முன்னராக முறைப்பாட்டைச் செய்ய பிரதம செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ நாட்டை விட்டு இம்மாத பிற்பகுதியில் தப்பித்திருந்த நிலையில் தற்போது அறிக்கை வெளிவிடப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

நெல்சிப் ஊழல்கள் பல உள்ளுராட்சி மன்றங்களில் நடந்திருந்த போதும் தமிழரசுக்கட்சி தனது பங்காளிகளான கட்சிகளது ஆளுகைக்குட்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றங்களில் விசாரணைகளிற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.