கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.
போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு, எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற வினாவை, நாம் ஒவ்வொருவரும் நம்முள் எழுப்பியாக வேண்டும்.
பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் ஒரு தொடக்கம். இலங்கையின் வடபகுதியில் நிலத்தடி நீர்ப்பற்றாக்குறை அடிப்படைப் பிரச்சினையாக மாறிவிட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் மக்களை விழிப்படைய வைப்பதற்கான நல்லதொரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.
வவுனியாக் குளத்தில் மண்போட்டு நிரவப்பட்டு, பொழுது போக்குப் பூங்காவாக அமைப்பதற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை நீர்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து, வவுனியா நகர சபையின் அனுமதியுடன், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் இரண்டு ஏக்கர், நிலம் அபகரிக்கப்பட்டு வேறு கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் அதனை அரச அதிகாரிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் கண்டும் காணாமல் இருந்துவருவதும், மௌனம் காப்பதும் கவலையளிப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வவுனியா நகரசபை. குளத்தின் நீரைக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயம் குறித்தோ, அருகிவரும் வவுனியாவின் நிலத்தடி நீர்மட்டம் குறித்தோ, சுற்றுச்சூழல் பேரழிவு குறித்தோ எதுவித அக்கறையும் இன்றியே இவை நடந்தேறுகின்றன.
கடந்த ஓராண்டாக இச்செயற்பாடுகளுக்கு எதிராக, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டும் துண்டுப்பிரசுரப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
வவுனியாக்குளத்தை காப்பாற்றுமாறு கோருகின்ற குரல்கள் புதிதல்ல. இற்றைக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர், ‘வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சினை: அன்பான வவுனியா வாழ் பொது மக்களே உங்களின் கவனத்துக்கு….’ என்ற தலைப்பிட்டு, துண்டுப் பிரசுர இயக்கம் நடத்தப்பட்டது. அத்துண்டுப்பிரசுரம் மூன்று அடிப்படையான விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தது.
நாம் எதிர்நோக்கும் வரட்சி, திடீரென்று நம் மத்தியில் வந்து புகுந்து விடவில்லை. வரட்சிக்கான மிக முக்கியமான காரணங்களாக காடுகளை அழித்து இயற்கையை நாசமாக்குவதும், நிலத்தடி நீரைப் பேணக்கூடிய பகுதிகளைப் பார்த்து அமைக்கப்பட்ட குளங்களின் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து, குளத்துக்கு மழை காலங்களில் நீர் வடிந்து ஓடும் இடங்களை வழிமறித்து, சொகுசான வீடுகள், கோவில்களை அமைத்துக் கொண்ட செயற்பாடுகளே காரணமாகும்.
வன்னியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களிலேயே தரைத்தோற்ற அமைப்பில் உயரமானது வவுனியாவாகும். இதை உணர்ந்தே, நமது முன்னோர் மிகுந்த தூரநோக்கத்தோடு குளங்களைக் கட்டி, அவற்றைத் தமது வாழ்வின் ஓர் அங்கமாகப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர்.
அப்படிப்பட்ட குளங்களை அழிப்பதால், எமக்கென்ன என்று அனேகமானோர் விட்டுவிட்டு இருந்தபடியால் தற்போது எதிர் நோக்கியிருக்கும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் அனைவரையும் பாதித்திருக்கிறது.
வவுனியாக் குளத்தின் சீரழிவால், சிறுபோக விவசாயம் பாதிக்கப்பட்டது. அதில் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள்; கால்நடைகளுக்கான நீர் இன்றி அவை தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிவதைக் காணமுடிகிறது. வவுனியாக்குளத்தில் மீன்பிடியை ஒரு வாழ்வதார தொழிலாகக் கொண்டிருந்த 20க்கு மேற்பட்ட குடும்பங்களின் வயிற்றில் நேரடியாக அடி விழுந்துள்ளது.
இன்று 10 ஆண்டுகளின் பின்னரும் அதேபோராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளோம் என்றால், பிரச்சினை எங்கே இருக்கின்றது என்பது, ஆராயப்பட வேண்டும். சமதரையான நிலவியல் அமைப்பைக் கொண்ட பிரதேசம் என்றவகையில், அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பிரதேசமாக வவுனியா இருந்துவருகிறது. அந்தவகையில், பிரதான நீரேந்து பகுதியாகக் குளங்களே இருந்து வருகின்றன.
வவுனியாவையும் அதைச் சுற்றியும் உள்ள பல ஊர்களின் பெயர்கள், குளத்தின் பெயருடன் முடிவடைகின்றன. ஆனால், இன்று அப்பெயர்களைக் கொண்ட பல ஊர்களில் குளங்கள் இல்லை.
குளங்கள் பற்றிப் பேசுவதென்றால், அனுபம் மிஸ்ராவை விட்டுவிட்டு எம்மால் பேசமுடியாது. இந்தியாவெங்கும் பயணம் செய்து, குளங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் செய்திகள், குளம் கட்டும் முறை, குளங்களை மீட்கும் பொறிமுறை ஆகியவற்றை ஆவணப்படுத்தியதோடு செயலிலும் காட்டியவர் அனுபம் மிஸ்ரா. எட்டு ஆண்டுகால களப்பணியின் பின்னர், 1993ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘குளங்கள் இன்னும் தேவையானவையே’ (The Ponds are Still Relevant) என்ற புத்தகம் மிகவும் முக்கியமானது. 80 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய புத்தகம் இன்றும் இந்தியக் கிராமப்புறங்களில் குளங்களை அமைக்கவும் புதுப்பிக்கவும் வழிகாட்டும் நூலாக உள்ளது. தனது முழு வாழ்க்கையையும் குளங்களுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் அர்ப்பணித்தவர் அனுபம் மிஸ்ரா.
குளங்கள் பற்றிய பல கதைகள் இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. 34 வகையான குளங்களை அடையாளம் காட்டும் மிஸ்ரா, குளங்களை உருவாக்கும் பெருங்கலைஞர்கள் காலப்போக்கில் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற துயர வரலாற்றையும் விளக்குகிறார்.
கொலனியாதிக்கத்தின் வருகை, பண்டைய நீர்நிலைகளுக்கும் நீர்சேமிப்பு முறைகளுக்கும் ஏற்படுத்திய சேதத்தையும் குறிப்பிடுகிறார். இன்று நீர் பண்டமாக்கப்பட்டுள்ள நிலையில் குளங்கள் முன்னெப்போதையையும் விட முக்கியமானவை என்பதை நாம் உணர வேண்டும்.
நீர் தொடர்பான நான்கு முக்கிய தரவுகள் எம் சிந்தனைக்கு உகந்தன.
1. உலகச் சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்குக் குடிப்பதற்கேற்ற நீர் கிடைப்பதில்லை.
2. ஆண்டுதோறும் நான்கு மில்லியன் மக்கள் நீர் தொடர்பான நோய்களால் மரணிக்கிறார்கள்.
3. நீர் தொடர்பான மரணங்களில் 98% விருத்தியடையும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.
4. உலகின் மொத்த நீர்வளத்தில் ஒருசதவீதம் மட்டுமே மனிதப் பாவனைக்கு உகந்த நன்னீராகும். இதனால் தான் ‘21ஆம் நூற்றாண்டின் யுத்தம் தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்க முடியும்’ என்ற உலகவங்கியின் கூற்று, அச்சம் தருவதாய் உள்ளது. அதேவேளை தண்ணீர், இன்று உலகின் மிக முக்கியமான விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இன்று தண்ணீர் நுகர்பண்டமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனதும் உரிமை என்ற நிலை மறுக்கப்பட்டு ஒரு விற்பனைப் பண்டமாகியுள்ளது. இது தண்ணீரின் தனியார்மயமாக்கலுக்குத் துணையாகிறது. தண்ணீர் நுகர்பண்டமானதால் அது சந்தைக்குரியதாகிறது. எனவே, அதை யாராவது சந்தையில் விநியோகிக்க வேண்டும். எனவே அரசுகள் தண்ணீரைத் தனியார்மயமாக்கி விற்பனைக்கு விட்டன. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் நீரைத் தனியார்மயமாக்குமாறு பல அரசுகளைக் கோருகின்றன.
உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள், விரைவில் முடியக்கூடிய வளமாக எண்ணெய் இருக்கின்றமை, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எதிர்பாராத காலநிலை மாற்றங்களாலான வரட்சி, வெள்ளப்பெருக்கு என்பவற்றின் பாதிப்புகள் போன்றன நீரின் அத்தியாவசியத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீரைக் குறிவைக்கும் செயற்றிட்டங்கள் அபிவிருத்தியின் பெயரால் இலங்கையின் வடக்குக்கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன. மூங்கில் பயிர்ச்செய்கை, கரும்புப் பயிர்ச்செய்கை என்பன இதில் பிரதானமானவை.
கழிவுகள் கலக்கும் இடமாகக் குளங்கள் மாறத் தொடங்கியுள்ளன. அபிவிருத்தியின் பேரால் குளங்களையும் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் இழந்துவிட்டு, எம்மால் செய்யக் கூடியது என்ன? குளங்களைத் தொலைத்த தலைமுறை என்பது எமக்குக் கனகச்சிதமாகப் பொருந்துகின்றது.
இப்போது எம்முன் உள்ள கேள்வி யாதெனில் இருக்கின்ற குளங்களைக் காப்பது எப்போது? இழந்த குளங்களை மீட்பது எப்போது? அனுபம் மிஸ்ரா தனது நூலுக்கான முன்னுரையை பின்வருமாறு நிறைவு செய்வார்.
‘இங்குள்ள நூறு, ஆயிரம் குளங்கள்
வெற்றிடத்தில் உருவானவவையல்ல;
அவற்றின் பின்னே ஓர் இணைந்த சக்தி இருந்தது.
உற்சாகப்படுத்திய ஒருசிலரும்
குளங்களை வெட்டும் சில பத்துப்பேரும்
அந்தச் சிலரும் பலரும் காலப்போக்கில்
நூறாய் ஆயிரமாய் மாறினார்கள். ஆனால்,
கடந்த சில நூற்றாண்டுகளில் அதிகம் படித்ததாய்
சொல்லிக்கொண்ட அரைவேக்காடுகள்
சிலதை, பத்தை, நூறை ஆயிரத்தை
ஒரு பெரிய பூச்சியமாக மாற்றினார்கள்’.
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ