உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது கடமைகளை நிறைவேற்ற தவறியபின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றவேளை மைத்திரிபாலசிறிசேன வெளிநாட்டிலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள மல்கம் ரஞ்சித் மைத்திரிபால சிறிசேனவின் தலைமத்துவ திறன்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தாக்குதல் இடம்பெறலாம் என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க தவறிய சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபருக்கு எதிராகவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறுதி அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது கத்தோலிக்க சமூகத்தை அவமானப்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் 21ம் திகதிக்கு முன்னர் தங்கள் கரிசனைகளிற்கு பதிலளிக்காவிட்டால் கத்தோலிக்க மக்கள் வீதியில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.