வங்காளதேசத்தில் இன்று 6,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக வருகிற 5-ந்தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.
இதுவரை வங்காளதேசத்தில் 6,24,594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,155 பேர் உயிரிழந்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal