அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் – சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும் என கேட்டுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடும் போது;
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு குறித்து செவ்வாய்க்கிழமை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவிற்கு முன்பதாக அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக ஓவிய கண்காட்சியும் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படும்.1988 ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக தேசிய மரபுரிமையாக சிங்கராஜ வனம் அங்கிகரிக்கப்பட்டது. அவ்வாறானதொரு சிறப்புரிமை மிக்க இந்த வனத்தை அழிப்பதற்கு இடமளிக்க கூடாது.அது மாத்திரமன்றி யுனொஸ்கோவும் உலக மரபுரிமையாக அங்கரித்துள்ளது.எனவே அதனை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டும்.
ஐ.நா உட்பட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு சிங்கரான வன அழிப்பு குறித்து அறிவிப்போம்.ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்போம்.புத்தாண்டு தினத்தில் வன பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பச்சை நிற ஆடைகளை அணிந்து முன்மாதிரியாக செயற்பட அனைவருக்கும் அறிவிப்போம். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சென்று அனைத்து ஆதராங்களையும் முன்வைத்து முறைப்பாடு செய்வோம்.மறுபுறம் நீதிமன்றத்தின் ஊடாக தற்போது சிங்கராஜ வனத்திற்குள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற திட்டங்களுக்கு இடைக்கா தடை உத்தரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.