அவுஸ்ரேலியான்னா ‘பயம்’… அது இப்போ இல்லையா?

“ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே  சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது” –  வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா.

as1_16413கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்ரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க அணியாக மாற்றியதில் ஸ்டீவ் வாக்குக்கு பெரும் பங்கு உண்டு. ஸ்டீவ் வாக் அணிக்குள் நுழைந்த பிறகு 1987ல் முதல் உலகக்கோப்பையை ஜெயித்தது ஆஸ்திரேலியா. அங்கிருந்து ஏறுமுகம் தான். வார்னே, மெக்ராத், ஹைடன், பாண்டிங், மார்ட்டின், பிரெட் லீ, கிளார்க், ஹஸ்ஸி, கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ்  என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் ஆஸியில் இருந்து புறப்பட்டு  வெடித்தனர். 1987 -2011 வரை ஆஸியின் ராஜ்ஜியம்  கொடிகட்டி பறந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஸியை ஒரு போட்டியிலாவது ஜெயிக்க வேண்டும் என்பது தான் அத்தனை  எதிரணிகளின்  குறிக்கோளாகவே இருந்தது. 2011 உலகக்கோப்பையில் காலிறுதி போட்டியில் யுவராஜ் விளாசலில் இந்தியா வெற்றிபெற, அன்று தொடங்கியதுஅவுஸ்ரேலியாவின் சரிவு.

பாண்டிங் பொறுப்பை விட்டுச் செல்ல, ஜாம்பவான் வீரர்கள் வரிசையாக ஓய்வு பெற, கேப்டன் பொறுப்பை ஏற்ற கிளார்க் தடுமாறினார். ஆஸி வீரர்களிடம் இருக்கும் அந்த ஆக்ரோஷம் கிளார்க்கிடம் இல்லை. தலைமை சொதப்ப, அணி தொடர் தோல்விகளைச்  சந்திக்க ஆரம்பித்தது. ஸ்மித், ஸ்டார்க்,மேக்ஸ்வெல், வார்னர் என புதுப்படை எழுந்து வருவதற்குள் ஆஷஸ் தோல்வியை காரணம் காட்டி ஓய்வு பெற்றார் கிளார்க்.  2014 இறுதியில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மாபெரும் விஸ்வரூபம் எடுத்தார் ஸ்மித். பவுலிங் ஆல்ரவுண்டரான ஸ்மித் பேட்ஸ்மேன் ஆனார், பின்னர் சில மாதங்களிலேயே கப்டனும் ஆனார். ஆனால் அணி மட்டும் தொய்வடைந்துகொண்டே  இருக்கிறது.

இன்றைய திகதியில் எல்லா நாடுகளுமே  உள்ளூரில் கில்லிகள் தான், அயல் மண் என்றால் தான் பதுங்க ஆரம்பித்து விடுகிறார்கள், 2015  ஒருதின உலகக்கோப்பையில் சொந்த மண் சாதகத்தால் எதிரணிகளை புரட்டிப்போட்டு கோப்பையைச்  ஜெயித்து கெத்து காண்பித்தது ஆஸி. சுமாரான கேப்டன் கிளார்க்  தன் பங்கிற்கு தனது பெயரை உலகக் கோப்பை வென்றவர்கள் பட்டியலில் பதித்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் ஃபார்ம் ஷேர் மார்க்கெட்டை போல ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அவுஸ்ரேலியா  வாங்கியிருக்கும் அடி.. மரண இடி!

சீட்டுக்கட்டு போல ஆஸியின் ராஜ்ஜியம் வேகவேகமாக சரிந்து வருவதற்கு பின்னர் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான விஷயங்கள்  அணித்தேர்வும்,ஸ்மித்தின்  கப்டன்சியும் தான். ஸ்மித் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆஸி அணியில் இன்னமும் பல நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அதிரடிக்கு மேக்ஸ்வெல், வார்னர், ஃபினிஷிங்குக்கு பெய்லி, பொறுமைக்கு வோக்ஸ், எந்தச் சூழ்நிலையிலும் ஆட கேப்டன் ஸ்மித், வேகப்பந்துக்கு ஸ்டார்க், ஹாசில்வுட், வேகப்பந்து ஆல்ரவுண்டருக்கு மார்ஷ் என பஞ்சமில்லாமல் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல அணித் தலைமையும் இல்லை, நல்ல  அணிச்சேர்க்கையும் இல்லை.

பெர்த், ஹோபர்ட் என  பந்துகள்  பேட்ஸ்மேனை நோக்கி சீறி வரும் ஆடுகளங்களை அமைப்பது தான் ஆஸ்திரேலியாவின் ஸ்டைல். அதுமட்டுமல்ல சவால்களை  பெரிதும் விரும்பும் அணி அது. எந்தவொரு  மேட்சிலும், எந்த வித மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் மூர்க்கத் தனமாக போராடுவது கங்காருக்களின் வழக்கம். அதற்கு காரணம் வலிமையான கேப்டன்சி. மற்ற அணிகள் போலல்லாமல் எப்பேர்ப்பட்ட  வீரர் என்றாலும் சரியாக விளையாடவில்லை எனில் உடனடியாக பாரபட்சமின்றி அவுஸ்ரேலிய  அணியில் இருந்து தூக்கிவிடுவார்கள். ஆஸ்திரேலிய அணியின் தேர்வு வாரிய முடிவுகளில் கேப்டன் கூட பெரியளவுக்கு தலையிடவே முடியாது. இதெல்லாம் அன்றைக்கு  மற்ற எதிராணிகளில் வியந்து பார்க்கப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் அணுகுமுறை அன்றைய  சூழ்நிலையில் சக்ஸஸ்ஃபுல்லானதற்கு காரணம் அணியில் சிறந்த வீரர்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்தார்கள். கடும் போட்டி இருந்ததால் அணியில் தொடர்ச்சியாக ஒழுங்காக ஃபெர்பார்ம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது, அவர்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்ய, அணி வென்று கொண்டே இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பழைய தரம் ஆஸி வீரர்களிடம் இல்லை. போதிய அனுபவம் இல்லாததால் தொடர்ச்சியாக  தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸி வீரர்கள் தடுமாறுகிறார்கள். ஆனால் அணி நிர்வாகமோ ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் வழக்கம் போல வீரர்களை மாற்றிவிடுகிறது. இதனால் ஏற்கனவே சிறப்பாக விளையாடும் வீரர்களான வார்னர், ஸ்மித், ஸ்டார்க் போன்ற ஒரு சில வீரர்களை தவிர வேறு யாரும் அணியில் நிலைப்பதில்லை, போதிய அனுபவம் இல்லாததால் இளம் வீரர்களும் திணறுகிறார்கள். இந்தியாவில் இருந்து பும்ரா, தென்னாப்பிரிக்காவில் இருந்து ரபாடா, இங்கிலாந்தில் இருந்து ஹமீது என மற்ற நாடுகளில் இளம் வீரர்கள் புறப்பட்டு வந்துகொண்டு இருக்க, அவுஸ்ரேலிய  அணியோ, பெரிய இளம்படை இருந்தாலும் அடையாளம் காண முடியாமல் தவிக்கிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் இது போன்ற சோதனை காலங்கள் வருவது சகஜம் தான். 2011 உலகக் கோப்பைக்கு பிறகு சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற, மூன்று, நான்கு ஆண்டுகள் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, எதிர்காலத்துக்காக அணியில் சில மாற்றங்கள் செய்தது பி.சி.சி.ஐ. இதன் பலன் தற்போது ஓரளவு தெரிகிறது. ரோஹித் ஷர்மா, அஷ்வின், ரஹானே, ஜடேஜா என வீரர்கள் அணிக்குள் நிலைத்து நிற்பதற்கு பின்னால் அத்தனை வசவுகளை தாங்கிக்கொண்டு அணியை கட்டமைத்த தோனியை மறந்து விட முடியாது.

ஆஸ்திரேலியா

இப்போது ஆஸ்திரேலியாவில் சிறந்த  தலைமையும் இல்லாமல், அணி நிர்வாக குளறுபடிகளும் இருப்பதால் சர்வதேச அரங்கில்  தலைகுனிவை சந்தித்து வருகிறது. அவுஸ்ரேலிய  அணியிடம் இருக்கும் ஒரு முக்கிய பிரச்னை, கிரிக்கெட்டில் புதிதாக ஒரு விஷயம் அறிமுகப்படுத்தும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதன் விளைவு  தான் இன்று வரை டி20 உலகக் கோப்பையை அவர்களால் வெல்லவே முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஆடும் 11 பேரும் டி 20 ஸ்பெஷலிஸ்டுகளாக இருந்தாலும் கூட கோப்பையை வெல்ல முடியாமல் போவதற்கு அவர்கள் கடைபிடிக்கும் மோசமான உத்தி தான் காரணம்.  குறிப்பாக தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்பது குறித்தது ஆஸியிடம் தெளிவு இல்லை, நாதன் லயன் தவிர சிறந்த சுழற்பந்து வீச்சாளரை உருவாக்க வில்லை, ஃபினிஷிங் இடத்தில் யாரை உட்கார வைப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

வீரர்களுக்கு தாங்கள் அணியில் இருப்போமா, இருக்க மாட்டோமோ என்ற பதற்றம் இருப்பதால் யாரும் அலட்டிக் கொள்ளாமல் விளையாட ஆரம்பித்த்து விட்டார்கள், கேப்டன் ஸ்மித் அதிர்ந்து பேசாதவர், இப்படி  எல்லா பிரச்னைகளும் ஒன்று சேர ஆஸி இப்போது தத்தளிக்கிறது. வார்னர் இயல்பாகவே ஒரு நல்ல தலைவராக தெரிகிறார். சன் ரைஸர் அணியை அரவனைத்துச் சென்று கோப்பை ஜெயித்ததும், தொடரின் பாதியில் ஸ்மித்  ஆஸி ஓடிவிட, அதன் பின்னர் இலங்கையில் ஆஸ்திரேலிய அணி  பிரம்மாண்ட வெற்றிகளை குவித்ததும் வார்னரின் மேல் எலலோரும் ஒரு கண் வைக்க காரணமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா

இந்த ஆண்டு இந்தியாவிடம் சொந்த மண்ணில் டி20 போட்டியில் வாஷ் அவுட் ஆனது, இலங்கையில் டெஸ்ட் தொடரில் வாஷ் அவுட் ஆனது, தென்னாபிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளில் வாஷ் அவுட்டாகி இருக்கிறது. இப்போது மீண்டும் சொந்த மண்ணில்  தென்னாப்ரிக்காவிடம் தொடரை இழந்து மட்டுமின்றி வாஷ் அவுட்டை தடுக்க கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை தென்னாபிரிக்கா மூன்று முறை ஆஸ்திரேலியா வந்து ஆடியிருக்கிறது, மூன்று முறையும் டெஸ்ட் தொடரை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது. சொந்த மண்ணில் இப்படியொரு மோசமான சாதனையை சமீபத்தில் எந்த அணியும் வைத்திருக்கவில்லை.

AUSTRALIA

பல அணிகள் சிறந்த வீரர்கள் இன்றி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஆஸ்திரேலிய அணியோ சிறந்த வீரர்கள் இருந்தாலும், கலைத்துப்போட்டு ஒரு சிறந்த அணியை  உருவாக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.இதே நிலைமை தொடர்ந்தால் அடுத்தாண்டு இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வாஷ் அவுட்டானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

அணி நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்கள் செய்வதும், எதிர்கால நோக்கில் சில உறுதியான முடிவுகளையும் எடுக்காவிடில் ஆஸ்திரேலியா இப்போதைக்கு இந்த சரிவில் இருந்து மீளுமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்.

பொதுவாக, அவுஸ்ரேலிய  அணி என்றால் ஏற்படும் அந்த பயம், எதிரணி வீரர்களிடம் பாதி தன்னம்பிக்கையை குறைத்து விடும். இப்போது அந்த பயத்துக்கு  வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது.முன்னெப்போதையும் விட அதிக முனைப்போடு வீறு கொண்டு கங்காருக்கள்  எழுந்து திருப்பித் தாக்க வேண்டும், ஏனெனில் தற்போது கடித்துக் குதற கிரிக்கெட் அரங்கில் கிவிக்களும், சிங்கங்களும், புலிகளும் காத்துக்கொண்டிருப்பதை கங்காருக்கள் மறந்து விடக்கூடாது.

-பு.விவேக் ஆனந்த்