அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்

தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார்.

புத்தகப்பையையும் சுமந்தபடி சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்துசென்ற இச்சிறுவன் அவ்வீதியால் சென்ற பெண்மணி ஒருவரால் மீட்கப்பட்டு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தனது வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வைத்து தமது மகன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பள்ளியினதும் குறித்த ஓட்டுநரினதும் இப்பொறுப்பற்ற செயலை தம்மால் நம்பமுடியவில்லை எனவும் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தனியாக அலைந்து திரிந்த மகனும், காணாமல்போன மகனைத் தேடிய தாமும் அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாதென தெரிவித்துள்ள பெற்றோர், குறித்த பள்ளிக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நடந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்புக்கோரியுள்ள பள்ளி நிர்வாகம் இத்தவறு எப்படி இடம்பெற்றது என்று ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.