இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர்.
இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், சுப்மான் கில், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்களுக்கு அவர்களது சாதனையை பாராட்டி கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.
இதன்படி அந்தந்த வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் ஷோரூம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழக வீரரான சேலத்தை சேர்ந்த டி.நடராஜன் காரை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மற்றொரு தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு நேற்று கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் உள்ள அந்த நிறுவன ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் காருக்குரிய சாவியை மஹிந்திரா சார்பில் அதன் மண்டல மேலாளர் வி.ஹரி வழங்கினார். நிகழ்ச்சியில் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தர், சகோதரி ஷைலஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.