புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே.
தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய தீர்மானத்தில்பெருமளவுக்கு இல்லை எனலாம்.
இத்தீர்மானத்தை நோக்கி அதிகம் உழைக்க தொடங்கியது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பாகியபிரித்தானிய தமிழர் பேரவைதான்-BTF. புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் உள்ள அமைப்புகளைஒருங்கிணைத்து அவர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்தார்கள். தாயகத்தில் இருக்கும் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்தார்கள். ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரேகடந்த ஆண்டின் இறுதியிலிருந்து பி.ரி.எப். இந்த முயற்சியில் ஈடுபடத்தொடங்கியது. இம்முயற்சிகளின் விளைவாக தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளாக காணப்பட்ட ஒரு பகுதியினரை அவர்கள் தமது ஒருங்கிணைப்புக்குள் கொண்டுவந்தார்கள்.
எனினும் கூட்டமைப்பில் சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் ஒத்துழைக்கவில்லை. அதாவது இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் மன்னாரை மையமாகக் கொண்டியங்கும் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவராகிய சிவகரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த அன்னையரின் பின்பலத்தோடு தாயகத்தில் உள்ள சிவில் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு முயற்சியை முன்னெடுத்தார்.
தாயகத்திலிருந்துமுன்னெடுக்கப்பட்டமுயற்சிகளுக்கு மூன்று கட்சிகளும் சாதகமாக எதிர்வினை ஆற்றின. இம்முயற்சிகளுக்கு சமாந்தரமாக மற்றொரு முயற்சி கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்துவால் முன்னெடுக்கப்பட்டது. மூன்று கட்சிகளும் இவ்விரு முயற்சிகளுக்கும் பொதுவாக ஒத்துழைப்பு வழங்கியபின்னணியில் முடிவில் சிவில்சமூகங்களின் அனுசரணையோடு ஒரு பொது ஆவணம் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆவணம் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை அதிகம் உடையது. இந்த ஆவணத்தின் பிரதான கருப்பொருள் எதுவெனில் பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜெனிவா தீர்மானங்கள் வெற்றி பெறவில்லை என்பதே. 2015 ஐ.நாதீர்மானத்தின் பின் பொறுப்புக் கூறல் விடயத்தில்அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஒரு விடயத்தைதெளிவாகச் சொன்னார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பரிசோதனையில் ஈடுபட்டோம் அதில் வெற்றி பெறவில்லை என்பதால் இப்பொழுது பொறுப்புக் கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று நாங்களும் கேட்கிறோம் என்று.
எனவே பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று மூன்று கட்சிகளும் சிவில்அமைப்புகளும் கூட்டாக கோரிக்கையைமுன்வைத்தன. இவ்வாறு தாயகத்தில் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரே குரலில் சிவில் சமூகங்களோடும் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளோடும் இணைந்து ஒரு பொது கோரிக்கையைமுன்வைத்தமை என்பது ஒரு மகத்தானஅடைவாகபார்க்கப்பட்டது. இக் கோரிக்கை வெளிவந்தபின் ஐநா மனித உரிமைகள் ஆணையர் எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு சமாந்தரமாக காணப்பட்டது. இவ்வாறான ஒரு பின்னணியில் ஜெனிவா தீர்மானத்தின் மீது தமிழ் தரப்புக்கள் ஏதோ ஒரு விதத்தில் செல்வாக்கைப்பிரயோக்கலாம் என்ற நம்பிக்கைகளும் ஒரு மூலையில் உருவாகின. ஆனால் புதியதீர்மானம் அந்த நம்பிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை நிரூபித்திருக்கிறது.
புதிய தீர்மானம் பொறுப்புக்கூறலைஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உள்ளேயே தொடர்ந்தும் பேணுகிறது. உள்நாட்டு விசாரணை பொறிமுறையை ஏற்றுக் கொள்கிறது. நிலைமாறு காலநீதிக்கான முன்னைய தீர்மானங்களின்தொடர்ச்சியாகவே அது காணப்படுகிறது. மேலும் மூன்று கட்சிகள் கூட்டாக முன்வைத்த ஒரு கோரிக்கையில் சிரியாவில்உருவாக்கப்பட்டது போன்ற ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அப்பொறிமுறை சாட்சிகளையும்சான்றுகளையும்சேகரிப்பதற்கானது. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறையானது ஐநா பொதுச்சபையின் கீழேயே உருவாக்கப்பட்டது. அதுவும் இப்பொழுது அடுத்தடுத்த கட்ட வெற்றிகளைப் பெறவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
இலங்கைக்கான புதிய தீர்மானத்தில் அப்படி ஒரு பொறிமுறைக்கான ஏற்பாடுகள் உண்டுதான் எனினும் அது எப்படிப்பட்ட பொறிமுறை என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அது மனித உரிமைகள் பேரவைக்கு கீழ் பட்டதாகவேதெரிகிறது. அதை விட முக்கியமாக ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள்ள வரையறைகளின் பின்னணியில் வைத்து அதை பார்க்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் பேரவையானது ஒரு நாட்டின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஆணையைப் பெற்றது அல்ல. ஒரு நாடு ஒத்துழைத்தால் மட்டுமே அந்த நாட்டின் சம்மதத்தோடுதான் பேரவை எதனையும் அந்த நாட்டுக்குள் செய்யமுடியும். ஒரு நாட்டின் மீது பொருளாதார தடைகளைவிதிக்கவோ தண்டனை விதிக்கவோ மனித உரிமைகள் பேரவைக்கு ஆணை கிடையாது. இப்படிப்பட்டஒரு பேரவைக்குக்கீழ்உருவாக்கப்படும் ஒரு தகவல் திரட்டும் பொறிமுறையானது குறைந்தபட்சம் சிரியாவில் உருவாக்கப்பட்டதைப் போன்றதும் அல்ல என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
மேலும் இப்போதுள்ள இலங்கை அரசாங்கம் முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டது. ஜெனிவா முன்னெடுப்புகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. எனவே இந்த அரசாங்கம் அப்படி ஒரு பொறிமுறைக்கு எந்தளவு தூரம் ஒத்துழைக்கும்?உள்நாட்டு விசாரணையை எப்படி நடத்தும்?
எனவேகூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் கட்சிகளின் கோரிக்கையைஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிறு வடிவமும் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை இங்கு உற்று கவனிக்க வேண்டும். எனவேபுதிய தீர்மானம் தாயகத்திலிருந்து கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகளைகாட்டவில்லை என்பதே மெய்நிலை ஆகும்.
ஆனால் தாயகத்தில்கூட்டமைப்பும்புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் அதில் அடைவுகள் இருப்பதாக கூறி அதற்கு உரிமை கோரும் ஒரு போக்கை காணக்கூடியதாக உள்ளது. இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்அமைப்புக்களுக்கும்கூட்டமைப்புக்கும் இடையே ஒருமித்த செயற்பாடு இருக்கவில்லை என்பதனை இக்கட்டுரையின் தொடக்கத்தில் கண்டோம்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் பிரிஎப் உட்பட ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ் அமைப்புகளும்கனடாவில் இருக்கும் அமைப்புகளும் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. கட்சிகளோடு பரிமாறிக்கொண்ட விடயங்களில் ஒரு பகுதி புதிய தீர்மானத்தில் காணப்படுகின்றது.
அதோடு பிரான்சை மையமாகக்கொண்டியங்கும் மற்றொரு அமைப்பின் உறுப்பினர் ஊடகங்களுக்கு வழங்கியதகவல்களின்படி புதிய தீர்மானத்தை உருவாக்கும் பொருட்டு தமது அமைப்பு எப்படியெல்லாம்நாடுகளை நோக்கி லொபி செய்தது என்பதை குறிப்பிட்டிருக்கிறார்
அதேசமயம் இரண்டு கட்சிகளோடு இணைந்து ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஒரு பொதுக்கோரிக்கையைமுன்வைத்த கூட்டமைப்பு கிட்டத்தட்ட சில கிழமைகளுக்குள்ளேயே தலைகீழ் ஆகியது. ஜெனிவாத் தீர்மானத்தின்பூச்சியவரைபுதொடர்பில் அக்கட்சி கருத்துக்கூறமறுத்தது. அதன்பின்அப்பூச்சியவரைபு தொடர்ச்சியாக மாற்றங்களுக்கு உள்ளாகியபோது அக்கட்சி அது தொடர்பில் கருத்து கூறமறுத்தது. முடிவில் தீர்மானத்தை அக்கட்சி ஆதரித்தது. அத்தீர்மானத்தில் தான் ஏனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து அனுப்பிய கோரிக்கைகளில் சில மறைமுகமாக நிறைவேற்றப் பட்டிருப்பதாகஒரு பொருள் கோடலையும் செய்கிறது.
இவை அனைத்தையும்தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. புதிய தீர்மானத்தை உருவாக்கும் முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் கூட்டமைப்பும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் இந்த பங்களிப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டஒரு பொதுக்கட்டமைப்பால் ஒரு பொதுவான வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையில் கூடித் தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் முன்னெடுக்கப் பட்டதா? என்பதே இங்குள்ள பாரதூரமானகேள்வியாகும்.
ஒவ்வொரு தரப்பும் அதனதன் நிகழ்ச்சி நிரலின்படி தனியோட்டம் ஓடியிருக்கின்றன. இது தொடர்பில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி ஒரு பொதுமுடிவை எடுத்து அப்பொதுமுடிவின் பிரகாரம் ஜெனிவாகையாளப்படவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த ஜெனிவாகூட்டத் தொடரும்நிரூபித்திருக்கிறது. இது ஒரு பாரதூரமானநிலைமை. தமிழ் மக்கள் தொடர்பில் யார் யாரோ முடிவெடுக்கிறார்கள். தமிழ் மக்கள் தொடர்பில் யார் யாரோ தீர்மானங்களை எழுதி ஒரு உலகப் பொது அரங்கில் நிறை வேற்றுகிறார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அம்பாசிடர்களாக யார் யாரோ உலகம் முழுதும் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். நாடுகளை நோக்கி லொபி செய்தோம் என்று கூறும் அமைப்புக்கள் இது தொடர்பில் எங்கே பொது முடிவை எடுத்தன? அந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? எந்த வெளியுறவுக்கொள்கையின் பிரகாரம் எடுக்கப்பட்டது? இது தொடர்பில் ஒரு மையத்திலிருந்து முடிவுகள் எடுக்கப்பட்டனவா?
இல்லை. இதுமிகப்பாரதூரமான ஒரு வெற்றிடம். தமிழ்த்தரப்பு தொடர்ந்தும் சிதறிக் காணப்படுகிறது என்பதைத்தான் நடந்துமுடிந்த ஜெனிவா கூட்டத்தொடர் நிரூபித்திருக்கிறதா?
இந்த வெற்றிடத்துக்கு காரணம் தாயகத்திலுள்ள கட்சிகளே. அவைதங்களுக்கிடையே ஒரு பலமான பொதுக்கட்டமைப்பை உருவாக்க தவறிவிட்டன. இந்த மையத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க தவறிவிட்டன. ஜெனிவா அரங்குஎனப்படுவது புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பிலேயே அமைந்திருக்கிறது. அதனால் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்த அரசியலை கடந்த 12 ஆண்டுகளாக முன்னெடுத்துவந்தமை இயல்பானது. ஆனால் மையம் தாயகத்தில்தான் இருக்கவேண்டும்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்பை ஒருங்கிணைக்க வேண்டும். தாயகத்தில் இருக்கும் மையம் அதற்குரிய தகைமையோடும் தயாரிப்புகளோடும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ஜெனிவா அரசியலை தமிழ்த்தரப்பு 12ஆண்டுகளின் பின்னரும் ஒருங்கிணைப்பின்றிக் கையாண்டிருக்கிறதா?
நிலாந்தன்