சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இன்றியமையாதது!

நீதிபதிகளை பதவி விலக்கும் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்

அரசியலமைப்பின் ; 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் மற்றும் அவர்களை பதவி விலக்குதல் ஆகியவற்றின் போது உரிய சட்டதிட்டங்களும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கும் நிகழ்வும் முதலாவது கூட்டமும் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இதுவரை காலமும் எனக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸவிற்கும் என்மீது நம்பிக்கைவைத்து,

வாக்களித்து இந்தப் பொறுப்பிற்குத் தெரிவுசெய்த அனைவருக்கும் முதலில் நன்றி கூறவிரும்புகிறேன்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தேர்தல் வரலாற்றிலேயே இம்முறைதான் அதிகளவான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அந்தவகையில் முன்வந்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகப் போட்டியிடுவதற்கு என்னை முன்மொழிந்தவர்களுக்கும் வழிமொழிந்தவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருப்பதுடன், அனைவரும் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அமைவாக என்னால் இயன்றவரை உயர் செயற்திறனுடன் செயலாற்றத் தயாராக இருக்கிறேன்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மை நீதித்துறையின் சுயாதீனத்துவத்திற்கு இன்றியமையாததாகும். அதேபோன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானங்கள் அதன் கொள்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் கருத்துச்சுதந்திரம் உள்ளடங்கலாக மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக செயற்பட வேண்டும். நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிசெய்வதும் விரிவுபடுத்துவதும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதுடன் அதனை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி நிர்வாகக்கட்டமைப்பு ஆகியவற்றின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் போதும் அவை அச்சுறுத்தலுக்குள்ளாகும் போதும் நாம் அதனைப் பாதுகாப்பதற்காக முன்நின்று செயற்படுவோம்.

அடுத்ததாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் மற்றும் அவர்களை பதவி விலக்குதல் ஆகியவற்றில் உரிய சட்டதிட்டங்களும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதுமாத்திரமன்றி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் அவதானம் செலுத்தும். மேலும் அண்மைக்காலத்தில் சட்டத்தரணிகள் அவர்களது கடமையைச் செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

குறிப்பாக பொலிஸ் நிலையத்தில் அல்லது சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரைப் பார்வையிடுவதற்கு அவரது சட்டத்தரணிக்கு அனுமதி மறுப்பதென்பது சட்டத்தரணிகளின் உரிமையை மீறுவதாகும் என்று குறிப்பிட்டார்.