தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961-ம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது.
அதேபோல இப்போதும் மோசமான அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் ஓடும் ஆறுகளான ஹாக்ஸ்பரி, நிபீன், பாரமட்டா ஆகியவற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது.
பல இடங்களில் ஆற்று வெள்ளம் கரையை தாண்டி ஊருக்குள் புகுந்துள்ளது. ஹாக்ஸ்பரி ஆற்றில் 42 அடி உயரத்துக்கு வெள்ளம் செல்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. அங்குள்ள வாரகம்பா அணை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அதன் வெள்ளமும் ஊருக்குள் புகுந்துள்ளது.
சிட்னியில் உள்ள விமான ஓடுதளத்தில் வெள்ளம் புகுந்ததால், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல சவுத் ஈஸ்ட் குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் வெள்ள நிலைமை மோசமாக இருக் கிறது. பிரிஸ்பேன் நகரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக 18 ஆயிரம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.