லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
இதற்கிடையே ஸ்வீடனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்சே மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், அவர் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவார் என்பதால் அவர் 2012-ம் ஆண்டில் இருந்து ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக ஸ்வீடன் அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இன்று லண்டன் வந்தார். அவருடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். நேராக ஈக்வடார் தூதரகத்திற்குச் சென்ற வழக்கறிஞர், அசாஞ்சேவிடம் விசாரணை நடத்தினார்.
ஈக்வடார் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ரகசியமாக விசாரணை நடப்பதால், விசாரணை விவரங்களை வெளியிட முடியாது என ஸ்வீடன் வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் முடிவில் அசாஞ்சே ஒப்புதல் அளித்தால் அவரது டிஎன்ஏ மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படும்.
இந்த விசாரணை முடிவுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வ ஆவணமாக தயாரிக்கப்பட்டு ஸ்வீடன் வழக்கறிஞர்களிடம் வழங்கப்படும் என தெரிகிறது. அதன்பின்னர், அரசு வழக்கறிஞர்கள் அடுத்தகட்ட விசாரணையை தீர்மானிப்பார்கள்.
விசாரணையின்போது அசாஞ்சேவின் பதில்களுக்கு விளக்கம் கேட்க ஸ்வீடன் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், புதிய கேள்விகள் எதையும் கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாஞ்சேவிடம் விசாரணை நடத்தத் தொடங்கிய அதேசமயம், ஈக்வடார் தூதரகத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆதரவு பேனர்களை ஏந்தியபடி ஆதரவு கோஷமிட்டனர்.