ஆஸ்திரேலியா பப்பு நியூ கினியா: அகதிகளுக்கு கொரோனா தொற்று

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் கடல் கடந்த தடுப்பு தீவாக செயல்படும் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இன்றைய நிலையில், அத்தீவில் சுமார் 90 அகதிகளும் 40 தஞ்சக்கோரிக்கையாளர்களும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போது கொரோனா தொற்றினால் அகதி ஒருவர், வயிற்று வலிக்கான மருத்துவ சிகிச்சைக்கு பார்த்து வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இவர் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கும் அகதி எனக் கூறப்படுகின்றது.

நாங்கள் தான் கொரோனா தொற்றினைப் பரப்புகிறோம் என உள்ளூர் வாசிகள் நினைக்கின்றனர் என கவலைக் கொண்டிருக்கிறார் அந்த அகதி.

“எங்களுக்குப் பயமாக உள்ளது, ஏனெனில் உள்ளூர்வாசிகள் அகதிகளான எங்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றனர். நாங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம் எனத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்,” எனக் கூறியுள்ளார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அகதி.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்றவர்களை சுமார் 8 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த அகதிகள் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவு, பப்பு நியூ கினியா, ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்கள், தடுப்பிற்கான மாற்று இடங்களாக கருதப்படும் ஹோட்டல்கள் என பல இடங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.