வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால் குடியரசு கட்சி வேட்பாளராக அப்போதைய அதிபர் டிரம்புக்கு ஆதரவாகவும், ஜோ பைடனை தோற்கடிக்கவும் ரஷிய அதிபர் புதின் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஜோ பைடன் மீது தவறான, நிரூபணம் ஆகாத குற்றச்சாட்டுகளை டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அதிபர் புதினுக்கும், அவரது நிர்வாகத்துக்கும் அமெரிக்கா கடும் கண் டனம் தெரிவித்தது.
மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பான அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் புதின் தலையீடு குறித்து அமெக்க அதிபர் ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறும் போது, அதற்கான விலையை அவர் (புதின்) கொடுப்பார், அவர் ஒரு கொலையாளி என்று விமர்சனம் செய்தார்.
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவுடனான உறவுகளின் பின்னணியில் என்ன செய்ய வேண்டும் என்பதை பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக ரஷிய தூதர் மாஸ்கோவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
ரஷிய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, ‘ரஷிய – அமெரிக்க உறவுகள் மேலும் மோசம் அடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் தான் முழுமையாக உள்ளது’ என்றார். இதனால் அமெரிக்கா – ரஷியா இடையே மோதல் போக்கு முற்றுகிறது.