தொடர் கதையாகிப்போன தமிழர்களின் பிரச்சனைகளும் தொடர் போராட்டங்களும்

தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வரும் குறிப்பாக “வடக்கு, கிழக்கு” பகுதியில் வாழும் தமிழர்கள் மீது நிலைகொண்டிருக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வேண்டி தமிழ் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், மிக மிக நீண்ட காலமாகவிருந்து பல அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டும் அதில் “சாண் ஏற முழம் சறுக்குவது” போன்ற தடைகள் ஏற்பட்டும் இறுதியில் தமிழ் இளைஞர், யுவதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். ஆனாலும் அவ்வாறு மனிதர்களை மனிதர்கள் நேருக்கு நேர் நின்று ஆயுதங்களால் சுட்டு படுகொலைகள் செய்தும் இன்றுவரை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அபிலாசைகள் எதுவும் நிறைவேறவில்லை என்றுதான் வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

1987 யூலை 29 ஆம் திகதிய இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி அதில் கிடைக்கப்பெறும் ஆரவுக்கமைய வடக்கு ,கிழக்கு இணைப்பை நிரந்தரமாக்குவது எனும் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெற்று நிருவாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் மீண்டும் அது வடக்கு மாகாணம் வேறாகவும், கிழக்கு மாகாணம் வேறாகவும், பிரிக்கப்பட்டுவிட்டன.

தமிழ் மக்கள் செறிந்து வாழம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஏனைய இன மக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தின் கீழான ஆட்சி குறிப்பாக காணி, பொலிஸ், உள்ளிட்ட அதிகாரப் பரவலாக்கல்களை தமிழ் மக்கள் கோரி நின்றனர். ஆனாலும் அது வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு நிருவாக அலகுகள் வெவ்வேறாக்கப்பட்டுள்ள போதிலும், இன்றுவரை அவை தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன.

இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நாளடைவில் மெல்ல மெல்ல பல்கிப் பெருகிக் கொண்டு செல்லும் பட்சத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கடத்தல்களும், காணாமல்போகச் செய்யும் நிலைமைகள், ஆங்காங்கே படுகொலைகள், என்பனவும் கட்டவிழ்த்து விடப்பட்டதையும் கண்டித்தும், அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி வேண்டியும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், கடத்தப்பட்டவர்களை மீள ஒப்படைக்குமாறும் வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள தமிழ் மக்களும், அவர்கள் சார்ந்த அரசியல் பிரமுகர்களும். சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், உள்ளிட்ட பலலரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள்.

இதில் குறிப்பாக தமது ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கு இலங்கை நாட்டிலுள்ள அரசாங்கம் நிரந்தரத் தீர்வைத் தராது அதற்காக சர்வதேச நீதிப் பொறிமுறை அல்லது கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலைமை வகிக்க வேண்டும் என்பதுவே அம்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் இந்நிலையில் இலங்கை அரசை சர்வதேச விசாரணை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறுபட்ட இடங்களிலும் உண்ணாவிரதம், சத்தியாகிரகம், என பல வடிவங்களில் அஹிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில்  மட்டக்களப்பில் அன்னை பூபதியம்மா உண்ணா நோம்பிருந்து உயர் நீத்த மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் 03.03.2021 அன்று சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இடம்பெற்று வருகின்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் சிலரின் பெயரை வாசித்து அவர்களுக்கு தடையுத்தரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனாலும், பொலிசார் தெரிவித்த பெயரில் அங்கு யாரும் இல்லையென தெரிவிக்கப்பட்டதை யடுத்து, குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு பொலிஸாரினால் பணிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் வருவதாகவும் அதற்கு முன்னர் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என அச்சுறுத்தும் பாணியில் பொலிசார் தெரிவித்தாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அம்பாறையிலும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி லண்டனில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த 05.03.2021 அன்று முதல் அம்பாறை மாவட்டத்திலும் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடரும் இச்சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

பொத்துவில் நீதிவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட  கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி ஆகியோரும் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்;

பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி  தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை  இந்த தடையுத்தரவைப்  பிறப்பித்துள்ளது. இதுஇவ்வாறிருக்க நல்லூரிலும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளன.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று மார்ச் 08.2021 அன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் அமைப்புகளில் உள்ள பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உமது பங்கு என்ன?, மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா?, பெண்களின் மனித உரிமைகள் எங்கே, வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டினை ஆளமுடியாதா? போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் போன்ற உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் சபையில் பெண்கள் பிரதிதித்துவம் வெறுமனே 5.3 வீதங்களே காணப்படுகின்ற நிலையில் அவை மாற்றப்பட்டு சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும், என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அதன்போது அந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டன.

தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கோருவதும், கேட்பதுவும், அற்ப சொற்ப விடையங்களையோ, அல்லது வெற்று வார்ததைகளையோ அல்ல. அந்த மக்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி வேண்டும், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் நிருவாகக் கட்டமைப்பு உரியமுறையில் வகுக்கப்படல் வேண்டும், அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, சுய நிருணய ஆட்சி அதிகாரங்கள் நிலைகொள்ளச் செய்ய வேண்டும், என்பதுவேயாகும்.

எனவே தமிழ் மக்கள் அல்லது தொடர் போராட்டங்களை அஹிம்சை ரீதியாக மேற்கொண்டு வருபவர்கள் எதிர்பார்க்கும் விடையங்கள் அனைத்தையும் ஒரே தடவையில் இல்லாவிட்டாலும், கட்டம் கட்டமாகவேனும் சம்மந்தப்பட்டவர்கள், நிவர்த்தி செய்து கொடுக்கும் பட்சத்தில் அம்மக்கள் ஓரளவேனும் அவர்களது வீட்டில் நிம்மதியாக உறங்குவார்கள் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இல்லையேல் தசாப்தங்கள் கடந்து பல்வேறுபட்ட வடிவங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டு வரும் மக்களின் வாழ்வு தொடர்ந்தும் தொடர்கதைகாகவே அமைந்துவிடும். எனவே இதற்குரிய தீர்வுகளை வழங்கி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வ.சக்திவேல்