தமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானிகளில் ஒருவரான திருமதி வானதி. சிறிநிவாசன் இம்மாதம் முதலாம் திகதி தனது ருவிற்றரில் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதம் முதலாம்திகதி கைச்சாத்தாகியுள்ளது என்று. அதற்கொரு படமும் பதிவிட்டுள்ளார்.இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் ( (Sagarmala Development Company Ltd)பயணிகள் கப்பல் தனியார் நிறுவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்தாகியது என்றும் இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திலீப்குமார் குப்தா அவர்களும் இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ.நிரஞ்சன் நந்தகோபன் அவர்களும் கைச்சாத்திட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
இப்படியொரு கப்பல் சேவை பற்றி மறவன் புலவு சச்சிதானந்தன் அடிக்கடி கூறி வந்தார்.ஆனால் அது நடக்கவில்லை. எனினும் திடீரென்று இம்மாதத் தொடக்கத்தில் இப்படியொரு செய்தி வந்திருகிறது.இது முதலாவது.
இம்மாதம் முதலாம் திகதி இலங்கை அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே 2018ஆம் ஆண்டு முன்னர் இருந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்திய மற்றும் யப்பானிய நிறுவனங்களுக்கு தருவதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால் ராஜபக்சக்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாக அவர்கள் கிழக்கு முனையமா மேற்கு முனையமா என்று மாறிமாறி அறிக்கைகளை விட்டார்கள். பொறுப்புமிக்க அமைச்சர்களே இது தொடர்பில் மாறிமாறி கதைத்தார்கள். முடிவில் இம்மாதத் தொடக்கத்தில் மேற்கு முனையத்தை தருவது என்று அமைச்சரவை ஒப்புக் கொண்டிருக்கிறது.ஆனால் கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகம் இலங்கை அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளது.
இதேகாலப்பகுதியில் இந்தியா சம்பந்தப்பட்ட வேறு ஒரு விடயத்துக்கும் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.அது என்னவெனில் இந்தியா மாலத்தீவுகள் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கூட்டு பாதுகாப்பு செயலணியை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்குரிய பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தன.அப்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அதன்படி இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு முக்கூட்டு கடல்சார் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குவது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ராஜபக்சக்கள் கடந்த மூன்று மாதங்களாக இழுத்தடித்து கடந்த வாரம் தான் அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த உடன்படிக்கையானது இந்து சமுத்திரத்தில் சீனாவின் பட்டியும் பாதையும் திட்டத்திற்கு எதிரான ஒரு இந்திய வியூகம் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே சீனா அதற்கு எதிர்ப்பு காட்டிய காரணத்தால் ராஜபக்சக்கள் அதை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இழுத்தடித்தார்கள்.முடிவில் கடந்த வாரம் அப்படி ஒரு முக்கூட்டு கடல்சார் பாதுகாப்பு செயலணி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக் கிறது.
கடந்த கிழமை ஸ்ரீலங்கா வான்படை அதன் 70வது ஆண்டு நிறைவை கொண்டாடியவேளை அதில் இந்திய வான்படை விமானங்கள் சாகசங்களை நிகழ்த்திய ஒரு பின்னணியில் அந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இவ்வாறு கடந்த கிழமை மட்டும் இந்தியாவை சந்தோஷப்படுத்தும் மூன்று முக்கிய முடிவுகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கிறது.
எனினும் இந்தியாவை சம்பந்தப்பட்ட வேறு சில விவகாரங்களிலும் அவர்கள் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக திருகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணெய் தாங்கிகளின் விடயம்; யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மீளப் பயன்படுத்தும் எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயம்; பலாலி விமான நிலையத்தை மீளத்திறப்பதோடு அவ்விமான நிலையத்தை இந்திய உதவியோடு இரண்டா ங்கட்டமாக விரிவுபடுத்துவது தொடர்பான விடயம் ; யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்திய கலாசார நிலையத்தை யார் நிர்வகிப்பது என்ற விடயம் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் துலக்கமான பதில் எதையும் வழங்கியிருக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியா சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.
பொறுப்புமிக்க அமைச்சர்களே குழப்பிக் குழப்பிக் கதைக்கிறார்கள். அரசாங்கமும் அமைச்சரவையும் மாறி மாறி முடிவுகளை எடுக்கின்றன. இந்த குழப்பம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தடுமாற்றத்தின் விளைவு என்று யாரும் அதிகம் ஆழமாக யோசிக்கத்தேவையில்லை. இது அரசாங்கம் திட்டமிட்டு வெளிக்காட்டும் ஒரு குழப்பமே.இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது பேரத்தை உயர்த்த முயல்கிறதா?
இதில் மூன்று விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடந்த கிழமை தீர்வு காண மூற்பட்டிருக்கிறது.அவ்வாறு தீர்வு காண முற்பட்ட காலகட்டம் எது என்பது இங்கு மிகவும் முக்கியமானது.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் பின்னணியில் கூட்டத்தொடரில் இலங்கையை ஆதரிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய அனுப்பிய கடிதத்துக்கு இந்தியா இன்று வரையிலும் பதில் கூறாத ஒரு பின்னணியில்; இந்தியா கடந்த முறைகளைப் போலவே இந்த முறையும் பெரும்பாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில்;இனப்பிரச்சினைக்கான தீர்வும் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் பிரிக்கப்பட முடியாதவை என்று ஜெனீவாவில் இந்தியப் பிரதிநிதி உரையாற்றியிருக்கும் ஒரு பின்னணியில் இந்த மூன்று விடயங்கள் தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. எனவே இது மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு ஜெனிவா பேரம்தான்.
இந்தியாவோடு மட்டுமல்ல எண்ணெய்வள நாடுகளோடும் அரசாங்கம் அப்படி ஒரு பேரத்துக்கு சென்றது.
கடந்த கிழமைக்கு முதற்கிழமை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் வந்திருந்தார்.அவரை அழைத்ததன் நோக்கம் எண்ணெய் வள நாடுகளை அவர் மூலமாக எப்படி ஜெனிவாவில் வென்றெடுக்கலாம் என்ற பேரம்தான். இந்த பேரத்துக்கு அரசாங்கம் பயன்படுத்திய கருவி எது தெரியுமா இலங்கைத் தீவில் உழஎனை-19 தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாதான்.அதாவது முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முன் வைத்து பேரம் பேசப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு தான் அனுமதி வழங்குவதாகவும் அதை வைத்து எண்ணெய் வள நாடுகளோடு தமக்கு சார்பாக இம்ரான்கான் பேரம் பேச வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.
இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில்
covid-19 ஆல் இறந்து போனவர்களின் உடல்களை புதைப்பது வழமை. விஞ்ஞானம் மிக வளர்ச்சியடைந்த அந்நாடுகளில் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. உலகின் மிக நாகரிகமடைந்த நாடுகள்;பலம்பொருந்திய நாடுகள் பின்பற்றும் ஒரு வழமையை குட்டி இலங்கைத்தீவு ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்கு ஏதேதோ தர்க்கங்களை முன்வைத்தது. அதற்கவர்கள் எப்படிப்பட்ட விளக்கங்களை வழங்கினாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் சிங்கள பௌத்த வாக்காளர்களை திருப்திப்படுத்துவதே என்பது புத்திசாலித்தனமாக யோசிக்கும் எல்லாருக்கும் விளங்கும்.
ஜனாசாக்களை பலவந்தமாக எரிப்பது என்பது ஒரு கூட்டு உரிமை மீறல். ஒரு பண்பாட்டு உரிமை மீறல்.இவ்வாறு தமது நாட்டின் பிரஜைகள் ஒரு பகுதியினரின் பண்பாட்டு உரிமையை மீறிய ஓர் அரசாங்கம் அந்த உரிமை மீறலை கைவிடுவதற்கு எண்ணெய் வள நாடுகளிடம் பேரம் பேசியதா? ஜெனிவாவில் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று பேரம்பேசியதா? எப்படி இருக்கிறது?ஒரு உரிமை மீறலை கைவிடுவதற்கு ஒரு பேரம்?
இவ்வாறு கடந்த கிழமைகள் முழுவதும் அரசாங்கம் ஜெனிவாவை நோக்கிப் பேரக் காய்களை நகர்த்தி வருகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மனித உரிமைகள் பேரவையில் மொத்தம் 47 நாடுகளில் இதுவரையிலும் பத்துக்கும் பதினைந்துக்கும் இடைப்பட்ட நாடுகளே அரசாங்கத்துக்கு ஆதரவாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அரசாங்கம் இதை ஒரு ஒரு மானப் பிரச்சனையாக பார்க்கிறது. அதே சமயம்இஇதுவும் அவர்களுக்கு சிங்கள-பௌத்த வாக்காளர்களை தமது பிடிக்குள் வைத்திருக்க உதவும்.சுமந்திரன் கூறுகிறார் ஜெனீவாவில் அரசாங்கத்தை தோற்கடித்தால் அது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று.ஆனால் அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் அது அரசாங்கம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அலையை 2021இற்கும் புதுப்பிப்பதற்கு உதவும் என்பதே அதன் தர்க்கபூர்வ விளைவு ஆகும்.
நாட்டின் வெளியுறவுச் செயலராக இருப்பவர் ஒரு ஓய்வுபெற்ற அட்மிரல். அவர் படைத்துறை பாணியிலேயே பேசுகிறார். சரண் அடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம் என்று கூறுகிறார்.அல்லது துப்பாக்கியை நெற்றியில் வைத்துக்கொண்டு இணங்கிவா என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்.இத்தனைக்கும் சீனா ஜெனிவாவில் தெளிவாக அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறது.அது இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்தின் பேரபலத்தை அதிகப்படுத்தியுள்ளது.
எப்படி என்றால் சீனா அரசாங்கத்தோடு நிற்பதனால் சீனாவுக்கு ஆதரவான நாடுகள் அரசாங்கத்தோடு நிற்கும். அல்லது சில நாடுகளை சீனா அரசாங்கத்திற்காக வென்றெடுத்துக் கொடுக்கும்.இது முதலாவது. இரண்டாவது- அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான நாடுகளும் ஜெனிவாவில் அரசாங்கத்தை ஆதரிக்கும்.உதாரணமாக கியூபா போன்ற நாடுகள். கடந்த ஜெனிவா கூட்டத்தொடர்களின் போதும் இது நடந்திருக்கிறது.இது இரண்டாவது. மூன்றாவது- சீனாவின் பக்கம் நிற்கும் இலங்கை தீவை எப்படி நயத்தாலும் பயத்தாலும் வென்றெடுக்கலாம் என்று அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன. இலங்கைத் தீவின் மீது புதிதாக அழுத்தங்களை பிரயோகித்தால் அது இலங்கை தீவை முழுவதுமாக சீனாவின் கைகளில் கொடுப்பதாக அமைந்து விடலாம் என்ற பயம் அவர்களிடம் உண்டு. எனவே இலங்கை தீவை சீனாவை நோக்கி உந்தித்தள்ளாத விதத்தில் எப்படி ஐ.நாத்தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றனர்.இதை இன்னும் கூரக்கச் சொன்னால் அதிக நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்மானத்தையே அவர்கள் திட்டமிடுகிறார்கள்.இம்முறை தீர்மானத்துக்கான உத்தேச வரைபுகள் அதைத்தான் காட்டுகின்றன.
எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஏனைய நாடுகளும் சரி அரசியல் உள்ளோட்டங்களைப் பொறுத்தவரை தங்களுடைய பிராந்தியஇபூகோள பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டே சிந்திக்கின்றன.அதற்கு தமிழ் மக்களின் விவகாரம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே மெய்நிலை.எனவே ஜெனிவாவை நீதிமன்றமாக கருதி ஜெனீவாவில் நீதி கிடைக்கும் என்று நம்பி ஜெனிவாவுக்காக காத்திருப்பதில் இருந்து தமிழ் மக்கள் முதலில் விடுபட வேண்டும்.ஜெனீவா மையப் போராட்டங்களை விடவும் நாடுகளை வென்றெடுப்பது எப்படி என்று சிந்திக்கவேண்டும்.தமது பேரபலத்தை உள்நாட்டிலும் வெளியரங்கிலும் எப்படி அதிகப்படுத்தலாம் என்று சிந்தித்து அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.தன்பலம் இன்றி வெளியாருக்காக காத்திருப்பது என்பது தமிழ் மக்களை சக்திமிக்க நாடுகள் கறிவேப்பிலை போல அல்லது ஆணுறை போல பயன்படுத்திவிட்டு எறியும் ஒரு நிலைமைக்கே இட்டுச் செல்லும்.