பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் 24 மணித்தியாலங்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
விசாரணை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதைப் பரிசீலிப்பதற்காக, அந்தப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைத்துள்ளமை உறுதியாகுமாயின், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபரிடம் அந்நபரை முன்னிலைப்படுத்த வேண்டும்.
குற்றத்தின் தன்மைக்கு அமைவாக, அந்த நபருக்கு எதிராக வழக்குத் தொடராமல் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தகுதியுடையவர் என்பது சட்டமா அதிபரின் நிலைப்பாடாக இருக்கலாம். என்றாலும் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
அந்த நபருக்கு எதிராக முன்வைக்கப்படும் காரணங்களை ஆராய்ந்து, ஒரு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு புனர்வாழ்வளிக்க உத்தரவிட முடியும்.
புனர்வாழ்வளிக்கப்படும் காலம் முடிந்த பின்பு, அதன் பெறுபேற்றைப் பரிசீலித்து விடுதலை செய்யவோ, மேலதிகமாக புனர்வாழ்வளிக்கவோ, பரிசீலித்துப் பார்க்கவோ வேண்டும் என்பதோடு, அதற்காகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
நீடிக்கப்படும் புனர்வாழ்வு கால எல்லையின் முடிவில், குறித்த நபர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal