அந்த ஒரு ட்வீட்டுக்காக என்னையும் சங்கி என்றார்கள்… சத்குருவுடன் சந்தானம் கலந்துரையாடல்

ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்று பலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக சந்தானம் கூறினார்.

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி வருகிறார். இதற்காக ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ஹேஷ்டேக்குடன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். இது இணையதளங்களில் வைரலானது. இதனை நடிகர் சந்தானம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்திருந்தார்.
‘பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள்’ என சந்தானம் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கோவில் மீட்பு கோரிக்கை தொடர்பாக, சத்குருவுடன் நடிகர் சந்தானம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சந்தானம் பேசியதாவது:-
சில நாட்களுக்கு முன், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்று சத்குரு  ட்வீட் செய்திருந்தார். அதைப் பார்த்தேன். நான் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது,  நிறைய கோவில்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். இங்கு வரும் வருமானத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை, உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டனர்.
எனவே, சத்குருவின் அந்த ட்வீட் எனக்கு சரி என்று பட்டது. ஆதரித்து நான் ட்வீட் போட்டேன். உடனே என்னையும் சங்கி என்று பலர் கமென்ட் செய்து திட்ட ஆரம்பித்தனர். ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
எனவே, இதுபற்றி சத்குரு என்ன நினைக்கிறார்? இதை என்ன மாதிரி செய்யப்போகிறோம்? என்பதை சத்குருவிடம் நேரடியாக கலந்துரையாடல் மூலம் அறிய விரும்பினேன். இதை ஊடகங்கள் வாயிலாக மக்களும் அறிந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் கோவில் மீட்பு தொடர்பான கேள்விகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் எழுப்பினார் சந்தானம். இதற்கு உணர்ச்சிப்பூர்வமாகவும் தெளிவாகவும் சத்குரு பதில் அளித்தார்.