ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலைத் தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடக்கோரி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G தொலைத்தொடர்பை சேவையை வெளிப்படையாக ஆஸ்திரேலிய அரசு தடைசெய்ததை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றின் மூலத்தைக் குறித்து அறிய விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வலியுறுத்தியதும் ஆஸ்திரேலியா- சீனா உறவைப் பாதித்தாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆஸ்திரேலியா குறித்து சீனா சமர்பித்துள்ள அறிக்கையில், பெருமளவிலான அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், முகாம்கள் அமைந்திருக்கக்கூடிய இடங்களை குறிப்பிடாத சீனா அதனை ‘மூன்றாம் நாடுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தஞ்சக்கோரிக்கையாளர்கள் நடுக்கடலில் இடைமறித்து பப்பு நியூ கினியா, நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலிய அரசு தடுத்து வைத்தது. இவையே, ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.
“ஆஸ்திரேலியா உடனடியாக கடல் கடந்த தடுப்பு மையங்களை மூட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அத்துடன் குடியேறிகள், அகதிகள், மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் குறிப்பாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொள்ள வேண்டும்,” என சீனா சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.