மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் சந்திப்பு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வேளையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படுவது நாட்டு மக்கள் மத்தியில் – குறிப்பாக சிங்கள பெரும்பாண்மை மக்கள் மத்தியில் மாகாண சபை முறைமை என்பது தேவையில்லை என்ற கருத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அதனைப் பெறப்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம்.
ஆகையினால், அப்படியான ஒரு சூழ் நிலைக்கு இடங்கொடாமல் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் இதன் இளம் தலைவர்கள் கலந்து கொள்வதை இந்தியத் தூதுவர் விரும்பியதால், கூட்டமைப்பின் இளம் தலைவர்களான உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 15 பேர் வரைக் கலந்து கொண்டதாகவும், இந்தியாவின் ஈழத் தமிழர் குறித்த அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்பதுடன், தமிழர் பகுதிகளில் அபிவிருத்தித் பணிகளை மேற்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என்பதையும் தூதுவர் குறிப்பிட்டார் என்று எம். ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.