இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை பொரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி அமர்வில் வெளியிடப்படவுள்ள நிலையில் அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் காலப்பகுதியில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்த மாபெரும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாக வந்து தற்போது உணவுதவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவரும் போரட்ட களத்தில் நிறைவடையவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தல் மதகுருக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கெடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.