இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான விடயமாகும்.
சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை தடுத்து நிறுத்த பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்தபோதிலும், அதனையெல்லாம் தாண்டி யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அது தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தினை இன்று சர்வதேசத்திற்கு உணர்த்தியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ள எழுச்சி நிலையினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு உத்திகளை இன்று பேரினவாதிகள் முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் தங்களது இருப்பினை உறுதிப்படுத்துவதற்கான போராட்டம், தங்களது வாக்கு வங்கிகளை உயர்த்துவதற்கான போராட்டம், தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி மீண்டும் அழிவு நிலைக்கு கொண்டுசெல்லும்போராட்டம், சுமந்திரனின் தலைமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கான போராட்டம், மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் போராட்டம், புலம்பெயர் மக்களின் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் என பல்வேறு கருத்துகளை இன்று சிங்கள பேரிவானவாத சக்திகள் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த கருத்துகளை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புல்லுருவி ரசியல்வாதிகளைக்கொண்டு கருத்துகளை வெளியிட்டு வருகின்றதையும் காணமுடிகின்றது.
மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை சுமத்தும் இந்த பேரினவாத அரசுகள் அவ்வாறான ஒரு விடயத்திற்காக இந்த போராட்டம் நடைபெறுகின்றதாகவிருந்தால், அதனை தடுக்கவும் அதில் ஈடுபட்டவர்களை ஒடுக்கவும் ஏன்ன அவசரஅவசரமான அடக்குமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ளமுடியாத நிலையில் தமிழ் மக்கள் இல்லை.
ஒரு புறம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் பொய்யான கருத்துகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் தெரிவித்துவரும் அதேநேரம், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் விசாரணை என்ற பெயரில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு செல்லாத வகையில் அவர்களை அச்சுறுத்தும் அல்லது அவர்களுக்கான எச்சரிக்கையினை விடுத்து வருகின்றது.
குறிப்பாக வடக்கில் இருந்தே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை அரசாங்கம் பெரிதாக அளட்டிக்கொள்வதில்லை. வடக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையோ, எழுச்சியையோ நிறுவத்துவதற்கு பாரியளவிலான அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருந்துவருகின்றது.
எனினும் கிழக்கில் எழுச்சிகளோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை பேரினவாத அரசுகள் என்றைக்கும் விரும்புவதில்லை. வடக்கில் அதிகமாக தமிழர்கள் வாழ்வதும் கிழக்கில் சிறுபான்மை சமூகமாக தமிழர்கள் வாழ்வதையும் கொண்டு இரு மாகாணங்களையும் பிரித்தாளும் தந்திரத்திற்குள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதையே பேரினவாத சக்திகள் என்றும் முன்னெடுத்து வருகின்றது. அதற்காக கிழக்கில் உள்ள பேரினவாதத்திற்கு அடிவருடிகளாக கொண்டுள்ள தமிழ் கட்சிகளை என்றும் சிங்கள அரசுகள் பயன்படுத்தி வருகின்றது.
இவ்வாறான அடிவருடிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பினையோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையோ ஒருபோதும் விமர்சிக்கவும் மாட்டார்கள். விமர்சிப்பவர்களையும் ஓரங்கட்டும் செயற்பாடுகளையே முன்னெடுப்பார்கள். இதனையே பேரினவாத அரசுகள் விரும்புகின்றன என்பதை நன்கு அறிந்துவைத்து, அதற்கு ஏற்றாற்போல் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கிழக்கில் இனியொருபோதும் எழுச்சி தோன்றாது. அவ்வாறான எழுச்சி விடயங்கள் உருவாகுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்ற தொனியில் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் எண்ணங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வகையில் கிழக்கில் இருந்து மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் அதன் மூலம் தமிழ் தேசியத்தின் பலத்தினை கிழக்கு மக்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ள காரணத்தினாலும் இன்று கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அதிக கவனத்தினை முன்னெடுப்பதற்கு சிங்கள தேசியவாதம் முயற்சித்து வருகின்றது.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் இருந்த எழுச்சியானது இன்று கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் என்ற தொனியில் வெளிக்கிளம்பியுள்ளதானது, சிங்கள பேரினவாத அரசுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் செயற்பாடாவே இருந்திருக்கின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை எதிர்காலத்தில் குழப்பியடிப்பதற்கு பேரினவாத சக்திகள் பல்வகையான செயற்பாடுகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
இன்று கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை தமிழ் மக்களின் போராட்டமாக மட்டும் வரையறுக்கும் சூழ்நிலையே காணப்படுகின்றது.
குறித்த போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாக தமிழ் -முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்திற்கான ஆதரவுகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தபோதிலும், போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் மாத்திரமே தடையுத்தரவுகளை நீதிமன்றம் ஊடாக பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இதேபோன்று போராட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் நீதிமன்ற கட்டளையினை மீறியமை, கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மக்களை ஒன்றுகூட்டியமை, போக்குவரத்துகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியமை போன்ற காரணங்களை கூறி தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன .இதுவரைக்கும் கிழக்கில் ஒரு முஸ்லிம் உறுப்பினருக்கு கூட எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் மூலம் கிழக்கில் தமிழர்கள் மட்டுமே போராடினார்கள், முஸ்லிம்கள் போராடவில்லை, ஆதரவு வழங்கவில்லையென்பதை காட்டுவதற்கு பேரினவாத அரசு முற்படுகின்றது என்பது வெள்ளிடைமலையாகும்.
முஸ்லிம்கள் மத்தியில் எந்தவித எழுச்சியும் ஏற்படவில்லையென்பதை காட்டுவது என்பதை விட, அவர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது. அதன் காரணமாகவே அவர்கள் மீது எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவும் இல்லை, எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. பொத்துவிலில் இருந்து பேரணி ஆரம்பமானபோது முஸ்லிம் பிரதேசங்களில் மகத்தான வரவேற்புகள் வழங்கப்பட்டன. பிரதான வீதிகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டன. பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் பொதுமக்கள் அணிஅணியாக திரண்டு ஆதரவு வழங்கினர். ஆனால் அவற்றினை கண்டுகொள்ளாததுபோல் அரசாங்கம் செயற்படுவதே, இந்த போராட்டம் சிங்கள அரசுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்துள்ளது என்பது புலனாகின்றது.
இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் மீண்டும் ஒரு தடைவ எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவருவதன் காரணமாக கிழக்கில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் அடக்கிவாசிக்கும் நிலையே காணப்படுகின்றது. இந்த கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும் சில வேளைகளில் உணர்வாளர்களுக்கு பாரியளவிலான நெருக்கடிகளை வழங்கக்கூடிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கில் எழுச்சிக்கு வித்திட்டவர்கள் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
எது எவ்வாறு இருந்தாலும் தமிழர்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள எழுச்சியை சிங்கள தேசம் என்றைக்கும் எதனையும் கொண்டு தடுத்து நிறுத்தமுடியாது. இன்று மாற்று அரசியல் சக்திகளை ஆதரித்தவர்கள் கூட தமிழ் தேசியத்தின் பின்னால் மீள திரும்பும் நிலையிலும் தமிழ் பேசும் சகோதர இனம் இன்று தமிழர்களுடன் கைகோர்க்க முன்வந்த நிலையிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகளை மிகவும் திட்டமிட்டு முன்கொண்டு செல்லவேண்டியது அனைத்து தமிழ் தேசிய சக்திகளினதும் பாரிய கடமையாகும்.
தமிழ்தேசிய சக்திகள் தங்களுக்குள் இருக்கின்ற மாற்றுக்கருத்துகளை புறந்தள்ளி இன்று கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை சிறந்த முறையில் பயன்படுத்தி, வடகிழக்கு இணைந்த தமிழ் பேசும் தமிழர் தாயகப்பகுதிகளை வெற்றிகொள்ள முன்வரவேண்டும் என்பதே இன்று அனைவரது எதிர்பார்ப்பாகும்.