ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்

46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் இக்கட்டுரை பின்வரும் அடிப்படைக் கேள்விகளை  எழுப்புகிறது. முதலாவது கேள்வி-தமிழ் மக்களின் அரசியலை ஜெனிவாவை நோக்கி குவிப்பது சரியா ?இதை இன்னும் கூர்மையாக கேட்டால் ஜெனிவாவுக்காகக் காத்திருப்பது அல்லது ஜெனிவாவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவது அல்லது வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது சரியா?

இரண்டாவது கேள்வி- ஜெனிவா எனப்படுவது மார்ச் மாதத்தில் நடக்கும் கூட்டத்தொடர் மட்டும்தானா?அதற்கு முன்னும் பின்னும் கிடையாதா? ஐநா மன்றம் போன்ற உலக பொது மன்றங்கள் இப்படிப்பட்ட கூட்டத்தொடர் குறித்து மார்ச் மாதத்துக்கு சற்று முன்னதாகத்தான் முடிவுகளை எடுக்கின்றனவா? அல்லது ஆண்டு முழுவதும்  அதற்கான தயாரிப்புகளும் ஏற்பாடுகளும் நடக்கின்றனவா?

மூன்றாவது கேள்வி-இவ்வாறு ஜெனிவாவை நோக்கி கவனத்தைக் குவிப்பது யார் ?ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலை ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்துவது யார் ?

இம்மூன்று கேள்விகளுக்கும் விடைகளை இனிக் காணலாம்.முதலாவது ஜெனீவா அரசியல் அல்லது  வெளியாருக்காகக் காத்திருத்தல். தமிழ் மக்கள் இப்பொழுதுதான் வெளியாருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதல்ல. கடந்த பல தசாப்தங்களாக தமிழ் அரசியல் ஏதோ ஒரு விகிதமளவுக்கு வெளியாருக்காகக் காத்திருப்பதாகவே இருந்துவருகிறது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் இந்தப் போக்கு இருந்தது.குறிப்பாக இந்தியா ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக தலையிட தொடங்கியதிலிருந்து இந்த வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் தீவிரமான ஒரு நிலையை அடைந்தது. 1987ஆம் ஆண்டு வரையிலும் அது  இந்தியாவுக்காக காத்திருப்பதாக இருந்தது.ஆனால் இந்திய -இலங்கை உடன்படிக்கைக்குப் பின் அக்காத்திருப்பு ஒரு போரில் முடிவடைந்தது.முடிவில் ஈழத்தமிழர்கள் “நீயுமா இந்தியா?” என்று கேட்கும் ஒரு நிலைமை தோன்றியது.

அதன்பின் ஈழத்தமிழர்களின் அரசியல் பெருமளவுக்கு ஐரோப்பிய மையமாக மாறியது. பலம் பொருந்திய தமிழ் டயஸ்போரா அதற்கு பின்புலமாக இருந்தது.இந்த ஐரோப்பிய மைய அரசியல் கிட்டத்தட்ட 1990 களில் இருந்து தீவிரமடைந்தது.இதன் இறுதிக் கட்டம் எங்கே வருகிறது என்றால் கடைசிக் கட்டப்போரில்தான்.கடைசிக் கட்டப்போரில்  வணங்காமண் கப்பல் வரும், ஐநா வரும் என்று காத்திருப்பதில் வந்து நின்றது.ஆனால் அங்கேயும் வெளியாருக்காக  காத்திருத்தல் இனப்படுகொலையிலேயே முடிந்தது.வணங்காமண் கப்பல் வரவில்லை. ஐநாவும் வரவில்லை. காத்திருந்த மக்களுக்கு கைகளை உயரத்தூக்கியபடி நிர்வாணமாக வட்டுவாகல் பாலத்தைக் கடந்து சரண் அடைவதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

இப்படியாக வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியலின் இரண்டாம் பாகம் தோல்வியில் இனப்படுகொலையில் முடிந்தது. அதன்பின் மூன்றாவது பாகம். அதுவும் மேற்கை நோக்கிய காத்திருப்புத்தான். அதுதான் ஜெனிவா மைய அரசியல். கடந்த பன்னிரண்டு ஆண்டுகால ஜெனிவா அரசியல் எனப்படுவது தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? இது தொடர்பில் தொகுக்கப்பட்ட ஆய்வு எதும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? இது தொடர்பில் தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வை யார் செய்வது?அல்லது தமிழ் அரசியலை குறித்து நீண்ட கால அடிப்படையில் திட்டமிடுவது;தீர்மானிப்பது; முடிவுகளை எடுப்பது யார் ?இக்கேள்வியை மேலும் கூராகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு ?இது முதலாவது கேள்வி தொடர்பான விவாதம்.

இனி இரண்டாவது கேள்விக்கு வரலாம்.அதாவது ஜெனிவா கூட்டத்தொடர் எனப்படுவது மார்ச் மாததம்தான் தொடங்கும் ஒரு செயற்பாட்டல்ல. ஐநா போன்ற உலகப் பொது மன்றங்களில் நிகழ்ச்சி நிரல்கள் பெரும்பாலும் ஆண்டுக்கணக்கில் திட்டமிடப்படும். அதன்படி ஜெனிவா கூட்டத் தொடருக்கான தயாரிப்புக்கள் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். அதை இன்னும் சரியாகச் சொன்னால் ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத்தொடரின் முடிவிலும் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சித் திட்டங்களும் கால அட்டவணையும் முடிவெடுக்கப்பட்டுவிடும். அக்கால அட்டவணையின் பிரகாரமே காரியங்கள் நடக்கும். எனவே ஜெனிவா தீர்மானம் எனப்படுவது மார்ச் மாதம்தான் தீர்மானிக்கப்படும் என்று இல்லை. அதற்குரிய வேலைகள் அதற்கு முன்னரே தொடங்கிவிடும். ஜெனிவா தீர்மானம் எவ்வாறு அமையவேண்டும் என்று இறுதி செய்யும்  சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் மார்ச் மாதத்தையொட்டி நடக்கலாம்.ஆனால் அதற்குரிய அடிப்படைத் தயாரிப்புகள் கடந்த கூட்டத் தொடரின் முடிவில் தொடங்கிவிடும்.இந்த நிகழ்ச்சி நிரலை மார்ச் மார்ச் மாதத்தையொட்டிய தமிழ்மக்களின் போராட்டங்கள் எந்த அளவுக்கு மாற்றக்கூடும்?

அது மட்டுமல்ல ஜெனிவா தீர்மானம் எனப்படுவது  நாடுகளின் தீர்மானம். நாடுகளின் தீர்மானங்கள் ஒரு கூட்டத் தொடரை ஒட்டி உடனடியாக எடுக்கப்படுகின்றவை அல்ல.அவை அந்தந்த நாடுகளில் வெளியுறவு கொள்கைகளின் பிரகாரம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும்.ஏனெனில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கட்டமைப்பு ரீதியிலானவை. கட்டமைப்புசார் உறவுகளின் அடிப்படையில் வெளியுறவு கட்டமைப்புகள் தீர்மானங்களை எடுக்கின்றன.அவ்வாறு கட்டமைப்புகளுக்கு ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானங்களில்படி நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படும்.இவ்வாறு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை சில சமயம் பிந்திய நடப்புக்கள் குழப்பலாம். எனினும் நாடுகளுக்கிடையிலான கட்டமைப்பு சார் உறவுகளின் படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அனேகமாக குழப்பாமல் இருக்கும் ஒரு நிலைமையே காணப்படும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஜெனிவா தீர்மானத்துக்காக வேலை செய்வது என்பது ஜெனிவாவை நோக்கி அல்ல மாறாக உறுப்பு நாடுகளின் தலைநகரங்களை நோக்கியே வேலை செய்யப்பட வேண்டும். இது தனிய தாயகத்தில் நிகழும் போராட்டமாக மட்டும் இருக்கக்கூடாது. தாயகத்தில் நிகழும் போராட்டங்கள் தமிழ் மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கும் அப்பால் உறுப்பு நாடுகளின் தலை நகரங்களை நோக்கி லொபி செய்யவேண்டும்.ஜெனிவாவுக்கு வரும் ராஜ்ய பிரதிநிதிகள் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மிக்கவர்கள் அல்ல. முடிவுகள் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களால் அதற்குரிய கட்டமைப்புகளால் ஏற்கனவே அந்த நாடுகளின் தலைநகரங்களில் எடுக்கப்படுகின்றன.அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளைத்தான் இந்த பிரதிநிதிகள் ஒப்புவிப்பார்கள்.இதில் அவர்கள் தூதுவர்கள் மட்டுமே. தீர்மானிப்பவர்கள் அல்ல.எனவே தமிழ் மக்கள் லொபி செய்ய வேண்டியது முடிவுகளை எடுக்கும் வெளியுறவு கட்டமைப்புக்களை நோக்கித்தான். அந்த லொபியை மார்ச் மாதத்தையொட்டித் தொடங்குவது என்பதே மிகத் தவறான அணுகுமுறை.அந்த லொபி தொடர்ச்சியாக நடக்கவேண்டும்.அது ஜெனிவாவை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கக்கூடாது. அது நாடுகளை நோக்கியதாக இருக்கவேண்டும். அதில் ஜெனிவா ஒரு பகுதி மட்டுமே.

அவ்வாறு தொடர்ச்சியாக நடப்பது என்றால் அதற்கு ஒரு வினைத்திறன் மிக்க கட்டமைப்பு வேண்டும். அரசுகளிடம் இருப்பது போல ஒரு பலமான வளம் பொருந்திய கட்டமைப்பு இருந்தால்தான் அது நிகழ்வுகளை மையமாகக் கொண்டு சிந்திக்காமல் நீண்டகால நோக்கில் சிந்தித்து முடிவுகளை எடுக்கும். எனவே ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்கள் தமிழ் கூட்டு உளவியலை நொதிக்க வைக்க உதவும் என்பதற்கும் அப்பால் ஐநா தீர்மானங்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா? இது இரண்டாவது கேள்வி.

UNHRC-5-300x225.jpg

மூன்றாவது கேள்வி-இவ்வாறு மார்ச் மாதத்தையொட்டி போராட்டங்களை ஏற்பாடு செய்வது யார்? இதுதான் பிரச்சினை. எல்லாருமே செய்கிறார்கள்.டயஸ்போரா செய்கிறது.தாயகத்தில் கட்சிகள் செய்கின்றன. டயஸ்போராவிலிருந்து தாயகத்தின் மீது செல்வாக்குச் செலுத்த விளையும் தரப்புக்கள் ஏற்பாடு செய்கின்றன. சில சமயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முகவர்களும் செய்கிறார்கள்.ஆனால் இவ்வாறு தமிழ் மக்கள் தொடர்பில் முடிவுகளை எடுத்து போராட்டங்களை நடத்துபவர்கள் தங்களுக்கிடையே ஏதும் ஒருங்கிணைப்பை கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்று தெரிகிறது.மாணவர்கள் போராடத் தொடங்கும் பொழுது அதில் போய் கட்சிகளும் குந்தியிருக்கும்.அல்லது சிவில் சமூகங்கள் போராடத் தொடங்கும் பொழுது அதில் கட்சிகள் இணைந்து கொள்ளும்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. இதுவிடயத்தில் நீண்டகால அடிப்படையில் சிந்தித்து தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விதத்தில் விவகாரங்களை திட்டமிடவும் முடிவெடுக்கவும் வல்ல ஒரு பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

இவ்வாறான ஒரு பொது கட்டமைப்பை உருவாக்க தமிழ் கட்சிகள் தயாரில்லை. தமிழ் டயஸ்பொராவிலும்

செயற்படும் அமைப்புக்கள் மத்தியில் ஒரு பொதுக்கட்டமைப்போ பொது வேலைத் திட்டமோ கிடையாது.டயஸ்பொராவிலும் தாயகத்திலும் தமிழகத்திலும் இயங்கும் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் ஒரு பொதுக்கட்டமைப்பு கிடையாது.அப்படி ஒரு பொது கட்டமைப்பை கடந்த பத்தாண்டுகளில் உருவாக்க முடியவில்லை.இதுதான் பிரச்சினை. தமிழ் மக்களை முழுவதுமாக பொறுப்பேற்று தமிழ்மக்களின் தலைவிதியை நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரலுடன் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு பொது கட்டமைப்பும் கிடையாது. அவ்வாறு ஒரு பொதுக்கட்டமைப்பு இல்லாத வெற்றிடத்தில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைப்பும் அவரவர் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அல்லது அவரை இயக்கும் எஜமானர்களின் உத்தரவுக்கமைய அல்லது தன்னார்வமாக எதையாவது சீசனுக்கு சீசன் ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த ஏற்பாடுகளில் இருக்கும் பிரதான நன்மையாவது அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குரிய ஒரு பொது உளவியலை உருவாக்குகிறது என்பதுதான். அடுத்தது அது வெளியுலகத்துக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டும்.ஆனால் அதில் இருக்கும்  தீமைகள் வருமாறு.

முதலாவது தீமை வெளியாருக்காக காத்திருக்கும் ஓர் அரசியல் எனபடுவது ஜெனீவா என்ற மாயையை நோக்கி தமிழ் நம்பிக்கைகளை குவிக்கக்கூடியது

இரண்டாவது தீமை- இந்த அரசியலைக் குறித்து சரியான மதிப்பீடும் சரியான திட்டமிடலும் இல்லாத வெற்றிடத்தில் வெளியாருக்காக காத்திருப்பது என்பது சில தமிழ்த் தரப்புகளை வெளியாரின் முகவர்களாகவே மாற்றிவிடும்.அது ஏற்கனவே தமிழ் டயஸ்போராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஜெனிவாவில் முடிவுகளை எடுக்கும் கருக்குழு நாடுகளில் வாழும் தமிழ் அமைப்புகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வளைக்க முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

மூன்றாவது தீமை-நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மாதங்களை மையமாகக்கொண்டு சீசனுக்கு சீசன் தமிழ் மக்களின் கூட்டு உளவியலை நொதிக்கச் செய்வது என்பது சோடாக் காஸைப் போல திடீரென்று பொங்கி திடீரென்று அடங்கி விடும் ஆபத்தும் உண்டு இது நீண்டகால நோக்கிலான போராட்டங்களை உருவாக விடாது.

நாலாவது தீமை-இவ்வாறு மையப்படுத்தப்படாத செயற்பாடுகளில்  எதிர் தரப்பின் முகவர்களும் உள்நுழைந்து விடுவார்கள்.தமிழ் செயற்பாட்டாளர்களை சிதறடித்து தமிழ் மக்களின் உளவியலை நீண்ட எதிர்காலத்தில் சோர்ந்து போகச் செய்து விடுவார்கள்.

மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை தங்களுடைய நோக்கு நிலைகளில் இருந்து நீண்டகால அடிப்படையில் திட்டமிட வேண்டும். அதாவது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் திட்டமிட வேண்டும். ஜெனிவாவை கையாள்வது என்பதும் அவ்வாறு ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும். அது தன்பலமின்றி வெளியாருக்காக காத்திருக்கும் ஓர் அரசியலாக மாறிவிடக்கூடாது.அதற்கு முதலில் தாயகத்தில் தமிழ்த்தரப்பு ஒரே தரப்பாகத் திரளவேண்டும்.  கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.அப்பொழுதுதான் வெளியாருக்காக காத்திருப்பது என்பது வெளியாரை கையாளும் ஒரு பொருத்தமான வளர்ச்சியைப் பெறும்.

நிலாந்தன்